search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மை, வைரஸ் நோய்களால் கால்நடைகள் பாதிப்பு:  தடுப்பூசி பற்றாக்குறையென விவசாயிகள் குற்றச்சாட்டு
    X

    கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    அம்மை, வைரஸ் நோய்களால் கால்நடைகள் பாதிப்பு: தடுப்பூசி பற்றாக்குறையென விவசாயிகள் குற்றச்சாட்டு

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.
    • உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை கடையை அரசு சார்பில் தொடங்கிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குநருமான வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

    மாமரங்களில் பராமரிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மருந்துகள் விற்பனை செய்யும் பெரும்பாலான கடைகளில் விலைப்பட்டியல் பார்வைக்கு வைக்கப்படவில்லை. மேலும், போலி மருந்துகளை விற்பனை செய்கின்றனர். ஏற்கனவே, 2 ஆண்டுகளாக மா விவசாயிகள் இழப்பினை சந்தித்து வருகிறோம். எனவே, தோட்டக்கலை அல்லது வேளாண்மைத்துறை சார்பில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை கடையை அரசு சார்பில் தொடங்கிட வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் அம்மை மற்றும் வைரஸ் நோய்களால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் அதிகளவில் உள்ளன. போதிய அளவில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்து, கால்நடைகளுக்கு செலுத்தி, கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய தொகை வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே தீவன விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பால் கொள்முதல் விலையை அரசு உடனடியாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். தொப்படிகுப்பத்தில் இருந்து சந்தூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உடனடியாக தூர்வார வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

    அதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

    அரசு சார்பில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை தொடங்க வழிவகை இல்லை. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும், உழவர் உற்பத்தியாளர்கள் குழு மூலம் தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெல் வயலில் சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளை விரட்டிட 400 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கி, தேனீக்கள் வளர்க்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது 10 சதவீத பேர் கூட தேனீக்கள் வளர்க்கவில்லை. மீண்டும் விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து தொடர் பயிற்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×