search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் நிரம்பிய ஏரி-குளங்கள்
    X

    ஈரோடு மாவட்டத்தில் நிரம்பிய ஏரி-குளங்கள்

    • ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
    • ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கொடுமுடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

    கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. தொடர்ந்து அதிகளவில் நீர்வரத்து இருந்ததால் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கடந்த வாரம் வினாடிக்கு 2 லட்சத்து15 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆறு வெள்ள காடாக காட்சியளித்தது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதேபோல் மறுபுறம் பவானி சாகர் அணையும் 102 அடியை எட்டியது. இதனால் பவானி சாகர் அணையில் இருந்தும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஒரு புறம் காவிரி, மற்றொரு புறம் பவானி ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. மாவட்டத்தில் 681 குளங்கள், 17 பெரிய ஏரிகள் மற்றும் சிறு ஏரிகள், ஏராளமான தடுப்பணைகள் உள்ளன. வனப்பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் காவிரி, பவானி ஆறுகளை நம்பியே இந்த நீர்நிலைகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏராளமான ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம்அணை, பெரும்பள்ளம் அணை ஆகியவற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அப்படி இருந்தும் பவானி, காவிரி ஓடும் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள குளங்கள், ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கொடுமுடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் 56 சிறிய ஏரிகள், 76 குளங்கள், 160 தடுப்பணைகள் உள்ளன. இதில் எண்ணமங்கலம் ஏரி, அந்தியூர் ஏரி,கெட்டி சமுத்திரம் ஏரி, பவானி ஜம்பை ஏரி, அம்மாபேட்டை பூனாட்சி ஏரி ஆகிய 5 ஏரிகளும் நிரம்பியது.

    இதே போல் கொடுமுடி யூனியனில் உள்ள கொந்தாலம் ஊராட்சியில் உள்ள கல்லாவரும் கோட்டை பெரிய குளம், காளிப்பாளையம் குளம் ஆகியவை முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. தொடர் மழை காரணமாக இந்த 2 குளங்களும் நிரம்பி உள்ளது. இதே போல் தேவம்பாளையம் தடுப்பணையும் தற்போது நிரம்பி உள்ளது.

    ஆனால் மற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் குறைந்த அளவிலேயே தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் அணையை ஒட்டிய பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×