என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்தவர் கடத்தப்பட்ட விவகாரம்- இளம்பெண் குருத்திகாவின் தந்தை கேரளாவில் கைது
- குருத்திகா காதல் திருமணம் செய்து கொண்டதற்காக, அவரது உறவினர்கள் அவரை கடத்தினர்.
- குருத்திகாவின் தந்தையை கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து இன்று தென்காசிக்கு அழைத்து வந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கொட்டாக்குளத்தை சேர்ந்தவர் வினித். என்ஜினீயர். இவர் அதே பகுதியை சேர்ந்த குருத்திகா பட்டேல் என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து குருத்திகா காதல் திருமணம் செய்து கொண்டதற்காக, அவரது உறவினர்கள் அவரை கடத்தினர். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் குருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிஸ்தா பட்டேல், குருத்திகா 2-வது திருமணம் செய்ததாக கூறப்படும் மைத்திரிக், உறவினர்கள் விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் உள்பட மொத்தம் 12 பேர் மீது குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் ஜாமீன், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியும், முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணை முடியும் வரை குருத்திகாவை கேரளாவில் உள்ள அவரது தாத்தா பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே குருத்திகாவின் தந்தை நவீன் பட்டேலை கைது செய்வதற்காக குற்றாலம் போலீசார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து குஜராத், கோவா, கேரளா உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அவரை கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து இன்று தென்காசிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






