என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை காணலாம்.
போக்குவரத்து நெரிசலில் திணறும் காவேரிபட்டணம்
- ஆக்கிரமிப்பு செய்து தங்களின் கடைக்கு வெளியே இருபுறமும் தங்கள் கடை பொருட்களை வைத்துள்ளனர்.
- போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக காவேரிப்பட்டணம் நகரம் திகழ்ந்து வருகிறது. இந்நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இந்நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் அலுவ லகங்கள், மருத்துவ மனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள் தொழிற் சாலைகள் என ஏராள மானவை உள்ளன.
அவற்றிற்கு தினமும் பலதரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் வந்து செல்கின்றனர்.
காவேரிப்பட்டணம் நகரத்தில் முக்கிய சாலையாக சேலம் மெயின் ரோடு உள்ளது. இந்த மெயின் ரோடில் கடை வைத்திருக்கும் பூக்கடை, பழக்கடை,பூஜைக்கடை புத்தகக் கடை, மளிகைக்கடை, பாத்திர க்கடை செருப்புக்கடை, துணிக்கடை, எலக்ட்ரிக்கல் கடை உள்ளிட்ட ஏராளமான கடைகளை நடத்தி வரும் கடைக்காரர்கள் அவர்களின் கடைக்கு வெளியே சுமார் 5 அடிக்கு நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து தங்களின் கடைக்கு வெளியே இருபுறமும் தங்கள் கடை பொருட்களை வைத்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமலும், காலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர வாகளங்களில் செல்ல முடியாமலும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளை ரோட்டிலேயே நிறுத்தி ஏற்றி மற்றும் இறக்கி விடுவதால் முக்கியமான அந்நேரங்களில் பெரும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
நான்கு ரோட்டில் உள்ள மசூதி முன்பு ரோடு ஓரமாகவே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் அங்கு மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






