என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னுரிமை வழங்குவது தொடர்பாக போலீசார் நடத்திய சமரச கூட்டம்
- கரூர் புன்னம் கோவிலில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக போலீசார் சமரச கூட்டம் நடத்தினர்
- போலீசார் நடத்திய சமரச கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் மதுரை வீரன் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சினை இருந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் சில சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த வாரம் இருதரப்பைச் சேர்ந்தவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை பாதியில் முடிவுற்றது. இந்நிலையில் மீண்டும் நேற்று வேலாயுதம்பாளையம் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தைநடத்தினர். அரவக்குறிச்சி உட்கோட்ட போலீஸ் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட போலீஸ் குழுவினர் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், புன்னம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் சண்டியாகும் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து செய்து கொள்ள வேண்டும். கோவில் சீரமைப்பு பணிக்காக அமைக்கப்படும் திருப்பணி குழுவில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்கு பெற வேண்டும். பின்னர் அந்த குழுவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து கோவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து கோவில் பராமரிப்பு குழுவில் உள்ள அனைத்து சமூகத்தினரும் அவரவர் பங்குக்கு கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த பணத்தை திருப்பணி குழு சார்பில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு அந்த வங்கி கணக்கில் போட வேண்டும். அனைத்து பரிவர்த்தனைகளும் காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும். மேலும் கும்பாபிஷேகத்தை அனைத்து சமூகத்தினரும் சேர்ந்த திருப்பணி குழு மூலம் செய்ய வேண்டும். தன்னிச்சையாக யாரும் செயல்படக் கூடாது என்று போலீஸ் டிஎஸ்பி அண்ணாதுரை தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு நபரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது. அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் இது குறித்து எடுத்துக் கூறி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்த பின்பு நாங்கள் இது குறித்து தெரிவிக்கிறோம். அதற்கு எங்களுக்கு ஒரு மாத காலத்திற்கு மேல் கால அவகாசம் வேண்டும் என்று கூறி அதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதனால் சமாதான பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.






