search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே இன்று காலை கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றிச்சென்ற வாகனங்கள் சிறைபிடிப்பு
    X

    தக்கலை அருகே இன்று காலை கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றிச்சென்ற வாகனங்கள் சிறைபிடிப்பு

    • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • 10 சக்கரங்களுக்கு மேலான கனரக லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்ல தமிழக அரசு தடை

    தக்கலை :

    கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் தினமும் அதிக அளவில் சென்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கனரக லாரிகள் அதிக அளவு பாரத்துடன் செல்வதால், குமரி மாவட்ட சாலைகள் சேதமடைவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த லாரிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இருப்பினும் கனரக லாரிகள் செல்வது குறைந்தபாடில்லை. இந்த நிலையில் 10 சக்கரங்களுக்கு மேலான கனரக லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. வருகிற 15-ந்தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

    இதனை முன்னிட்டு தற்போது அதிக அளவிலான கனரக லாரிகள் நேற்று முதல் கேரளாவுக்கு படையெடுத்து சென்று வருகின்றன. இன்று அதிகாலையும் தக்கலை, சித்திரங்கோடு, முட்டைக்கோடு, செம்பருத்திவிளை வழியாக கனிமவளங்கள் ஏற்றிய கனரக லாரிகள் சென்றன. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காலை 7 மணிக்கு பிறகு பள்ளி வாகனங்கள் செல்ல தொடங்கிய பிறகும், கனரக லாரிகள் சென்றதால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்ல முடியாமல் தவித்தனர். அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கோதநல்லூர் பேரூராட்சி தலைவி கிறிஸ்டல் பிரேமகுமாரி, துணை தலைவர் டேவிட் மற்றும் பொதுமக்கள் திரண்டு செம்பருத்திவிளை சந்திப்பில், கனரக லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கனரக லாரிகள் வரிசையாக சாலையில் நின்றதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொற்றிகோடு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கனரக வாகனங்கள் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

    Next Story
    ×