search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிற்றாறு முதல் பத்துகாணி வரை மேலும் 25 இடங்களில் கண்காணிப்பு காமிரா
    X

    சிற்றாறு முதல் பத்துகாணி வரை மேலும் 25 இடங்களில் கண்காணிப்பு காமிரா

    • வனத்துறையினர் எலைட் படையினர் சல்லடை போட்டு தேடும் பணி தீவிரம்
    • மேலும் ஒரு பசுவை புலி தாக்கியது

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மூக்கறைக்கல் பகுதியில் குடியிருப்புகளில் புலிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் புலி சிக்கவில்லை. அந்த பகுதியில் 25 இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் புலியை பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தினமும் ஆடு, மாடுகளை கடித்து குதறி வந்தது.

    இதையடுத்து புலியை பிடிக்க களக்காட்டில் இருந்து மருத்துவ குழுவினரும், தேனி மாவட்டம் வைகை ஆறு பகுதியில் இருந்து எலைட் படையினரும் குமரி மாவட்டம் வந்தனர்.

    அவர்கள் குமரி மாவட்ட அதிகாரி இளையராஜா உடன் இணைந்து புலியை பிடிக்க புதுவியூகம் வகுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிற்றாறு சிலோன் காலனி மூக்கறைக்கல் பகுதியில் வனத்துறையினர் ஆட்டு கொட்டகை போன்று கூண்டு அமைத்து புலியை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் புலி சிக்கவில்லை. வனத்துறையினரும், எலைட் படையினரும் பழங்குடி மக்களுடன் இணைந்து 2 குழுக்களாக பிரிந்து சென்று தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று புரத்தி மலைப் பகுதியில் மேலும் ஒரு மாட்டை புலி கடித்து உள்ளது. இதில் பசுவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். புலி சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. அந்த பகுதி முழுவதும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சிற்றாறு பகுதியில் ஒரு குழுவினரும், சிற்றாறிலிருந்து பத்துகாணி வரை மேலும் ஒரு குழுவினரும் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காட்டுப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மேலும் 25 இடங்களில் கண்காணிப்பு காமிராவை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று காலை அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சிற்றாறு முதல் பத்து காணி வரையில் உள்ள பகுதிகளில் காமிராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி இளையராஜா கூறுகையில், புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினர் எலைட் படையினரும் காட்டுப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சிற்றாறு சிலோன் காலனி மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது சிற்றாறில் இருந்து பத்துகாணி வரை தேடும் பணி நடந்து வருகிறது. கூடுதலாக 25 இடங்களில் கண்காணிப்பு காமிராவும் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×