search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டுவிளையில் குளத்தில் மூழ்கி மாணவன் பலி
    X

    திட்டுவிளையில் குளத்தில் மூழ்கி மாணவன் பலி

    • ஒரு ஆண்டுக்கு பிறகு 14 வயது சிறுவன் கைது
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில் :

    கேரள மாநிலம் விழிஞ்சம் கல்வெட்டான்குழி ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது நசீம். இவரது மனைவி சுஜிதா. இவர்களது மகன் ஆதில் முகம்மது (வயது 12).

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் குமரி மாவட்டம் திட்டு விளை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். 6-ந்தேதி ஆதில் முகம்மது திடீரென மாயமானார்.

    இந்த நிலையில் 8-ந்தேதி அந்த பகுதியில் உள்ள குளத்தில் ஆதில் முகம்மது பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் துப்பு துலங்க வில்லை.

    இந்த நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ஆதில் முகம்மதுவின் தாயார் சுஜிதா கேரள முதல்-மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். ஆதில்முகம்மது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மீண்டும் விசாரணை தொடங்கியது.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசாரணை தொடங்கினார்கள். டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். இந்த வழக்கு தொடர்பான தகவல்களை சேகரித்தனர். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    சம்பவத்தன்று ஆதில் முகம்மதுவை அழைத்து சென்ற சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆதில் முகம்மது குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட போது டி-ஷர்ட் எதுவும் அணியவில்லை. ஆனால் அவர் வீட்டில் இருந்து சென்றபோது டி-சர்ட் அணிந்திருந்தார். அந்த டீ-சர்ட் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

    கடந்த 6 மாதமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சிறுவன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 304(2) ஆபத்தான இடத்திற்கு அழைத்து செல்லுதல், 201 தடயத்தை மறைத்தல், 202 செல்வதை சொல்லாமல் மறைத்தல் ஆகிய பிரிவு களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×