search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனிமவள விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு
    X

    கனிமவள விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு

    • வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து துறை சார்ந்த கலந்தாய்வு கூட்டம்
    • இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், மே.22-

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் கனிமவள விதிமீறல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கனிமவளம் அனுமதியில்லாமலும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தணிக்கை மற்றும் கண்காணிக்கவும், கனிமவள புவியியல் ஆய்வாளர், தனி வட்டாட்சியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து வாகன சோதனை இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் கடந்த வாரம் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அதிக பாரம் ஏற்றி வந்த 4 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக பாரம் ஏற்றியும், அனுமதியில்லாமலும் வருகிற வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும், கனிமவளங்களை கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தினை தவிர்த்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள குழுவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்திடவும், வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் விதிமீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் இதுபோன்ற கனிமவள விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீதும் சோதனை மேற்கொண்டு, அபராதம் விதித்து உரிய நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு குழுவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மதுரை மண்டல பறக்கும் படை துணை இயக்குநர் குருசாமி, துணை இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) தங்கமுனியசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியன், தனி தாசில்தார்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×