என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- கல்வித்தகுதி இல்லாமல் யாராவது சிகிச்சை அளிக்கிறார்களா? என்ற சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
- குமரி மேற்கு மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன
நாகர்கோவில் :
போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி போலி டாக்டர்களை கண்டறிய அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அதன்படி குமரி மாவட்டத்திலும் உரிய கல்வித்தகுதி இல்லாமல் யாராவது சிகிச்சை அளிக்கிறார்களா? என்ற சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்படி யாரேனும் செயல்பட்டால், அவர்களை பற்றி தகவல் தரவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த சூழலில் குமரி மேற்கு மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு படிப்பை படித்து விட்டு அதற்கு மாறாக சிலர் போலியாக சிகிச்சை அளிப்பது தெரி யவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-
போலி மருத்துவர்களை கண்டறிய போலீஸ் டி.ஜி.பி. அறிவுறுத்தலின் படி, மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறையினர், சப்-கலெக்டர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினோம். தொடர்ந்து போலி மருத்துவர்கள் யாராவது செயல்படுகிறார்களா? என சோதனையில் இறங்கி உள்ளோம். பொதுமக்கள் புகார் அளிக்கவும் அறிவு றுத்தினோம்.
இந்த சூழலில் 2 புகார்கள் வந்தன. அது பற்றி விசாரித்து வருகிறோம். அவர்கள் படித்தது வேறு, ஆனால், சில சிகிச்சைகளை அளிக்கின்றனர். உரிய கல்வித்தகுதி இல்லாமல் சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.