search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் நிராகரிப்பு
    X

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் நிராகரிப்பு

    • குமரியில் உதவி மையம், இ-சேவை மையங்களில் திரண்ட பொதுமக்கள்
    • வருமான வரி, கள ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    நாகர்கோவில் :

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் பெற குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கள ஆய்வு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியான விண்ணப்பங்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தகுதியான பயனாளிகளுக்கு கடந்த 15-ந்தேதி முதல் செல்போனில் குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. குறுஞ்செய்திகள் வந்தவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் சுமார் 75 சதவீதம் பேருக்கு குறுஞ்செய்திகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான பணம் கிடைக்காதவர்கள் மீண்டும் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் குறுஞ்செய்திகள் வராத நிலையிலும் பெண்கள் ஏராளமானோர் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் 5 ஊழியர்கள் இந்த பணிக்கு நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை, கணினி உதவியுடன் ஆன்லைனில் பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தனர். வருமான வரி, கள ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இதேபோல் தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் தாலுகா அலுவலங்களிலும் உதவி மையங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியது. நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் உதவி மையங்கள் இன்று முதல் திறந்து செயல்பட்டது. அதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து அந்த குறைபாடுகளை எப்படி களைவது என்பது குறித்து அறிவுரைகளை வழங்கி அனுப்பினார்கள்.

    இந்த சூழலில் உதவி மையங்களில் இண்டர்நெட் சேவை திடீரென தடைபட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த பொதுமக்களின் விவரங்களை கேட்டு, அதனை ஒரு நோட்டில் ஊழியர்கள் பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் மறு விண்ணப்பத்திற்காக ஏராளமோனார் இ-சேவை மையங்களுக்கு சென்றனர். ஆனால் அங்கு மறு விண்ணப்பத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மறு விண்ணப்பத்துடன் வந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வந்த பணத்தை எடுப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்றதால் அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    Next Story
    ×