search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு
    X

    குமரியில் மழை நீடிப்பு

    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
    • பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய்மொழி, ஆணைக்கிடங்கு, கோழி போர்விளை, முள்ளங்கினா விளை, புத்தன்அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. முள்ளங்கினா விளையில் அதிகபட்சமாக 18.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டி வருகிறது.

    மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாகவே இருந்தது. காலை 10 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. அரை மணி நேரமாக மழை கொட்டியது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.46 அடியாக உள்ளது. அணைக்கு 435 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 684 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.40 அடியாக உள்ளது. அணைக்கு 207 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 12, பெருஞ்சாணி 7.2, சிற்றாறு 1-6.4, மாம்பழத்துறையாறு 8.4, பூதப்பாண்டி 6.2, சுருளோடு 12.6, கன்னிமார் 8.4, பாலமோர் 13.4, மயிலாடி 4.6, கொட்டாரம் 2.6, ஆணைக்கிடங்கு 1.2, அடையாமடை 4.1, கோழி போர்விளை 4.2, முள்ளங்கினா விளை 18, திற்பரப்பு 10.9, நாகர்கோவில் 5.4.

    Next Story
    ×