என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரியில் மீண்டும் மழை
- களியலில் 71 மில்லி மீட்டர் பதிவு
- திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் முழுவதும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.களியல் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 71 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அருவியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிபாறை பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை பெய்து வருகிறது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிபாறை பெருஞ்சாணி அணை களுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணை யின் நீர்மட்டம் வெகுவாக உயர தொடங்கியுள்ளது.
நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. தடிக்காரங்கோணம் கீரிப்பாறை குலசேகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்தது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 34.79 அடியாக உள்ளது. அணைக்கு 980 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.80 அடியாக உள்ளது.அணைக்கு 621 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1-அணைநீர்மட்டம் 14.73 அடியாகவும் சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 14.83 அடியாகவும் உள்ளது.பொய்கை நீர்மட்டம் 9.10 அடியாகவும் மாம்பழத் துறையார் அணை நீர்மட்டம் 35.76 அடியாகவும் முக்கடல் நீர்மட்டம் 16.10 அடியாகவும் உள்ளது.
மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு பேச்சிபாறை 46 பெருஞ்சாணி 43.4 புத்தன் அணை 44.2 சிற்றார் 1-41.2சிற்றார்2-22.4 பூதப்பாண்டி 6.2 களியல் 71 கன்னிமார் 2.2 குழித்துறை 12.8 சுருளோடு 11.2 தக்கலை 1 குளச்சல் 8.6 இரணியல் 6 பாலமோர் 12.2 திற்பரப்பு 65.2 கோழிபோர்விளை 3.4 முள்ளங்கினாவிளை 4.2 முக்கடல் 8.2.






