search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்கும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை காங்கிரசுக்கு வலுசேர்க்கும் - கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம்
    X

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்கும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை காங்கிரசுக்கு வலுசேர்க்கும் - கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம்

    • சிறிது நேரம் ஓய்வெடுத்த ராகுல் காந்தி அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை தனி படகில் சென்று பார்வையிட்டார்
    • கன்னியாகுமரியில் இருந்து 3 ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு சென்று முதல் நாள் தனது பயணத்தை நிறைவு செய்தார்

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடந்தது.தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி நேற்று மதியம் 1.45 மணிக்கு கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த ராகுல் காந்தி அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை தனி படகில் சென்று பார்வையிட்டார்.

    காமராஜர் மண்டபத்தையும் ராகுல் காந்தி பார்வையிட்டார். காந்தி மண்டபத்திற்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காந்தி மண்டபம் வந்து சேர்ந்தார். இருவரும் ஒன்றாக காந்தி மண்டபம் உள்ளே சென்றனர்.இருவரும் அங்கு நடந்த பிரார்த்தனையில் பங்கேற்றனர். மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். சுமார் 20 நிமிடம் காந்தி மண்டபத்தில் அவர்கள் இருந்தனர்.

    பின்னர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இருவரும் காந்தி மண்டபத்தை விட்டு வெளியே வந்தனர். காந்தி மண்டபம் முன்பு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி பாதயாத்திரை தொடங்கி வைத்தார். சுமார் ஐந்து நிமிடம் காந்தி மண்டபம் முன்பு முதல்-அமைச்சரும், ராகுல் காந்தியும் பேசிக் கொண்டிருந்தனர்.

    ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார். ராகுல் காந்தி பாதயாத்திரையாக அங்குள்ள பொதுக்கூட்ட மேடைக்கு மாலை 5.10 மணிக்கு வந்தார். தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு ராகுல் காந்தி மேடைக்கு வந்து சேர்ந்தார்.

    இதைத் தொடர்ந்து தேசியக் கொடிக்கு ராகுல் காந்தி மரியாதை செய்தார். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் அருகே பொது கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஒரு மணி நேரமாக தலைவர்கள் எழுச்சி உரை ஆற்றினார்கள்.மேடையில் ராகுல் காந்தி அமர்ந்திருந்தார். மாலை 6.10 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய ராகுல் காந்தி 25 நிமிடமாக பேசினார். 6.35 மணிக்கு தனது பேச்சை நிறைவு செய்தார். அவர் தனது பேச்சில் தேசிய கொடியின் பாதுகாப்பது நமது கடமை என்பதையும், நாட்டை பாதுகாப்பது நமது உரிமை என்பதை பற்றியும் எடுத்துரைத்தார்.

    நாட்டை காக்கவே பாதயாத்திரை மேற்கொள்வதாகவும் பேசினார்.மேலும் ஆர். எஸ். எஸ்., பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து பேசினார். இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கம் குறித்தும் ராகுல் காந்தி எடுத்துரைத்தார். தனது பேச்சை நிறைவு செய்த ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    கன்னியாகுமரியில் இருந்து 3 ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு சென்று முதல் நாள் தனது பயணத்தை நிறைவு செய்தார்.முதல் நாள் கன்னியாகுமரியில் 5 மணி நேரம் ராகுல் காந்தி தனது நிகழ்ச்சியை மேற்கொண்டு உள்ளார்.ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ராகுல் காந்தி தனது பாதயாத்திரை மேற்கொள்ளும் போது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய எழுச்சி கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி சந்திப்பு 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ராகுல்காந்தியின் இந்த பாதயாத்திரை நாடு முழுவதும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கு ஊன்றுகோளாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×