search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம்
    X

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம்

    • இதுவரை 1933 மாணவிகள் பயனடைந்துள்ளனர்
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

    மேலும், மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் Right to Education (RTE) யின் கீழ் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    மாணவிகள் 8, 10, 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. 2022-2023-ம் கல்வியாண்டில், மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர். இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியை பொருத்த மட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவி களுக்கும். மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    2021-2022-ம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இந்த மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள். இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.

    இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

    இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவண நகல்களைக் கொண்டு மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும் இணையதளம் முகவரியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 1933 கல்லூரி மாணவிகள் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×