search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக உதவி மையத்தில் 2-வது நாளாக குவிந்த பொதுமக்கள்
    X

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக உதவி மையத்தில் 2-வது நாளாக குவிந்த பொதுமக்கள்

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக குவிந்த பொதுமக்கள்
    • 9 இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், செப்.20-கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 75 சதவீதம் பேருக்கு உரிமை தொகை கிடைத்துள்ளது. பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. நிராகரிப்பு குறித்து இதுவரை செல்போனில் எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை. எனவே கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தை பொருத்த வரை அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் திருவட்டார் ஆகிய 6 தாலுகா அலுவலகங்கள் மற்றும் நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் என மொத்தம் 9 இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த மையங்களில் 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்த பலரும் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஏராளமான பொதுமக்கள் உதவி மையங்களுக்கு வந்திருந்தனர். ஆனால் சர்வர் செயல்படாதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி மையத்திற்கு இன்று 2-வது நாளாக காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அவர்கள் உதவி மையங்களில் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டு காத்திருந்தனர். காலை 10.15 மணிக்கு உதவி மைய ஊழியர்கள் ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டை சரி பார்த்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தனர்.

    சிலருக்கு வங்கி கணக்கு குளறுபடி, வருமான வரி பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உதவி மையங்களுக்கு வந்த பொதுமக்களின் முகவரிகள் மற்றும் செல்போன் எண்களை பதிவு செய்துவிட்டு ஆன்லைன் மூலமாக குறைபாடுகளை பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதே போல் தாலுகா அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    Next Story
    ×