என் மலர்
உள்ளூர் செய்திகள்

சினிமா போல் சம்பவம்- 25 கி.மீட்டர் தூரம் துரத்தி சென்று காரை மடக்கிய அதிகாரிகள் - கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி சிக்கியது
- சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவெண்கொண்ட காரை கை காட்டி நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது
- சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது
கன்னியாகுமரி :
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் திக்கணங்கோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவெண்கொண்ட காரை கை காட்டி நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது.உடனே அலுவலர்கள் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர்.
சிறிது தூரம் சென்றதும், அந்த வழியாக அதிக கனிம பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் சோதனை செய்து கொண்டிருந்த கல்குளம் வட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியர் ரமேசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவரும், நிற்காமல் சென்ற வாகனத்தினை பின் தொடர்ந்து துரத்தி சென்றார். சினிமாவில் வரும் சம்பவம் போல இந்த சேசிங் அமைந்தது.
கருங்கல், பள்ளியாடி, இரவிபுதூர்கடை, சுவாமி யார்மடம், வேர்கிளம்பி வழியாக சுமார் 25 கிலோமீட்டர் தூரம் அதிகாரிகள் காரை துரத்தி சென்றனர். கண்ணனூர் என்னுமிடத்தில் செல்லும்போது எதிரே அப்பகுதி கோவிலிலிருந்து சாமி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.இதனால் காரை தொடர்ந்து இயக்க முடியாமல் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு ஓட்டுநர் உட்பட இருவர் இறங்கி ஓடிவிட்டனர்.
பின்னர் காரை சோதனை செய்ததில் அதில் மறைத்து வைத்திருந்த சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு குடோனில் ஒப்படைக்கப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட கார் வட்டவழங்கல் அலுவ லகத்திற்கு கொண்டு செல் லப்பட்டது.






