search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிற்றாறு பகுதியில் ஆட்டை அடித்து கொன்ற புலியை பிடிக்க காமிரா மூலம் கண்காணிப்பு
    X

    சிற்றாறு பகுதியில் ஆட்டை அடித்து கொன்ற புலியை பிடிக்க காமிரா மூலம் கண்காணிப்பு

    • சிற்றாறு பகுதியில் புலி வந்த தடங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்றனர்.
    • ஒரு மிளாவையும் புலி அடித்துள்ளதாகவும் பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு குடியிருப்பை சேர்ந்த மோகன்தாஸ், தொழிலாளி. இவரது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்றை புலி அடித்து கொன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.

    இதையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில் களியல் வனச்சரக அலுவலர் சேக் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வன அலுவலர்கள் சிற்றாறு பகுதியில் புலி வந்த தடங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்றனர். அப்போது மல்லமுத்தன்கரை என்ற இடத்தில் ஒரு புதர் பகுதியில் ஆட்டின் குடல் மற்றும் தோல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் புலியின் காலடி தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்நிலையில் அப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் விஷேச காமிரா பொருத்தும் பணிகள் வனத்துறை சார்பில் நேற்று மாலையில் தொடங்கப்பட்டது. இதுகுறித்து களியல் வனச்சரக அலுவலர் சேக் முகைதீன் அப்துல் காதர் கூறியதாவது:-

    சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக குடியிருப்பு மக்கள் கூறியதையடுத்து மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் அப்பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆய்வுகள் செய்தோம். தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் தடயங்களை முழுமையான அளவில் சேகரிப்பதில் சிக்கல் உள்ளது. எனினும் விலங்கின் கால்தடத்தை கண்டுபிடித்துள்ளோம்.

    இது புலியா அல்லது சிறுத்தையா என்பதை உறுதியாக சொல்லமுடியாது. மேலும் காணமல்போன ஆட்டின் தோல் மற்றும் குடல் பகுதிகளையும் கைபற்றியுள்ளோம். தற்போது இங்கு 4 இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படும் பணிகள் நடந்து வருகின்றன. விஷேச தன்மை கொண்ட இந்த கேமராவில் புலி அல்லது சிறுத்தை என எதுவாக இருந்தாலும் சரிவர பதிவாகும். மேலும் எந்த விலங்காக இருந்தாலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலிருந்து காட்டுகள் துரத்தும் பணிகளை வனத்துறை செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து சிற்றாறு குடியிருப்பை சேர்ந்த ஞானசுந்தரம் கூறியதாவது:-

    சிற்றாறு பகுதியில் நடமாடுவது புலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிறுத்தை மற்றும் புலிக்கான வித்தியாசங்கள் மக்களுக்கு நன்றாக தெரியும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கால் தடம் புலியின் கால்தடமாக தான் உள்ளது. மேலும் புலியானது மல்லன்முத்தன் கரை காணிகுடியிருப்பை ஒட்டிய ரப்பர் கழக கூப்பு எண் 49 பகுதியில் உள்ளது. ஒரு மிளாவையும் புலி அடித்துள்ளதாகவும் பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    புலி நடமாட்டம் காரணமாக தொழிலாளர்கள் பால்வடிப்புக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மாலையில், வழுக்கம் பாறை சந்திப்பிலிருந்து நடந்து குடியிருப்பு பகுதிக்கு வருவதற்கும் அச்சப்படுகின்றனர்.

    எனவே வனத்துறையினர் புலியை கண்காணித்து அதனை காட்டுப்பகுதிக்குள் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டை கொன்ற புலியை பிடிக்க கண்காணிப்பு காமிரா மரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் இரவு பகலாக வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். விரைவில் புலியை பிடித்து அதை காட்டு பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×