search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் சீசன் தொடங்குவதற்கு முன்பு அனைத்து லாட்ஜ்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவு
    X

    கன்னியாகுமரியில் சீசன் தொடங்குவதற்கு முன்பு அனைத்து லாட்ஜ்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவு

    • வருகிற 17-ந்தேதி முதல் கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்க இருக்கிறது
    • ஒரு லாட்ஜில் சமீபத்தில் ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது உங்கள் அனைவருக்கும் தெரியும்

    கன்னியாகுமரி, நவ.9-

    கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பலரிடம் பணம் இரட்டிப்பு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி முதல் கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் இன்டர்நேஷனல் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது.

    கூட்டத்துக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    கன்னியாகுமரியில் 100-க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் உள்ளன. இதில் ஒரு லாட்ஜில் சமீபத்தில் ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே இனி வரும் காலங்களில் லாட்ஜ்களில் அறை எடுக்க வருபவர்கள் பற்றி முழுமையாக அவர்களை பற்றிய விவரங்களை தெரிந்த பிறகு அறை கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் செல்போன் எண்கள் உண்மையிலேயே அவர்களுடையதுதானா? என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகள் இல்லாமல் எந்த ஒரு நபருக்கும் லாட்ஜ்களில் தங்குவதற்கு அறை கொடுக்கக் கூடாது.

    சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது லாட்ஜூகளில் தங்கி இருந்தால் உடனடியாக போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேபோல நீண்ட நாட்களாக தொடர்ந்து அதே லாட்ஜில் யாராவது தங்கி இருந்தால் அவர்களைப் பற்றிய விவரங்களையும் உடனடியாக போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    ஒரு சில லாட்ஜூகளில் நிறைய சமூக விரோத செயல்கள் நடந்து கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சபரிமலை சீசன் தொடங்குவதற்கு முன் அனைத்து லாட்ஜ்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.

    இது ஒன்றுதான் குற்றங்களை தடுக்க நிரந்தர தீர்வாகும். எனவே கண்காணிப்பு கேமரா இல்லாத லாட்ஜ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்சம் 90 நாட்களாவது கண்காணிப்பு கேமராவில் பதிவுகள் ஸ்டோர் ஆகி இருக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு லாட்ஜூகளிலும் காவலாளிகளை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசினார். இந்தக் கூட்டத்தில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, கன்னியாகுமரி லாட்ஜ் உரிமையாளர்கள், சங்க செயலாளர் வக்கீல் ராஜேஷ், துணைத் தலைவர் தாமஸ், பொருளாளர் ஜாண் கென்னடி, மற்றும் 100-க்கும் மேற்பட்ட லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×