search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் 640 மையங்களில் இன்று நடந்தது
    X

    குமரியில் 640 மையங்களில் இன்று நடந்தது

    • பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாமில் குவிந்த இளம் வாக்காளர்கள்
    • 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    நாகர்கோவில் :

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27-ந்தேதி வெளியிடப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 37,405 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்களும் 143 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர்.

    பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக உள்ளனர். இந்த நிலையில் 1.1.2024 தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பக் கூடியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு கட்டமாக இன்று (சனிக்கிழமை) வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 640 மையங்களிலும் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இளம் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து தங்களது பெயர்களை பதிவு செய்த னர். பெண் வாக்காளர்களும் அதிகமானோர் வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கும் ஒரு சிலர் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இளம் வாக்காளர்களை, அரசியல் கட்சியினர் பலர் அழைத்து வந்திருந்தனர். 18 வயது நிரம்பிய பெண்கள் தங்களது பெற்றோருடன் வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

    இதை தொடர்ந்து நாளை (5-ந் தேதி) யும், வருகிற 18 மற்றும் 19 -ந் தேதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×