search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம் - புகை மண்டலங்களால் பொதுமக்கள் அவதி
    X

    வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம் - புகை மண்டலங்களால் பொதுமக்கள் அவதி

    • இரண்டு வாரங்களுக்கு முன்பு குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகளும் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது.

    இங்கு மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த பகுதியில் குடியிருப்புகளும் அதிக அளவு உள்ளதால் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    குப்பை கிடங்கை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    காற்று வேகமாக வீசியதையடுத்து தீ மள மளவென்று பரவியது. இதையடுத்து நாகர்கோவில் மற்றும் திங்கள்சந்தையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகளும் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்று 2-வது நாளாக தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதை யடுத்து கன்னியாகுமரியில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. காற்று அதிகமாக வீசுவதையடுத்து தீ வேகமாக பரவி எரிந்து கொண்டே இருக்கிறது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்து வருகிறார்கள்.

    அந்த பகுதியிலிருந்து புகை மண்டலங்களும் கிளம்பி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். குப்பை கிடங்கில் எரியும் தீயை ஒருபுறமாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீச்சி அடித்து அணைத்துக் கொண்டிருக்க மறுபுறத்தில் தீ எரிந்து கொண்டே இருக்கிறது.

    ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாகவும் குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்த இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    Next Story
    ×