search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை-கோதையாறு வழித்தடத்தில் சேதமான சாலையில் அரசு பஸ்சை இயக்க டிரைவர்கள் எதிர்ப்பு
    X

    பேச்சிப்பாறை-கோதையாறு வழித்தடத்தில் சேதமான சாலையில் அரசு பஸ்சை இயக்க டிரைவர்கள் எதிர்ப்பு

    • மாணவ-மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு அரசு பஸ்சை நம்பி தான் உள்ளார்கள்.
    • இரவு நேரங்களில் அரசு டிரைவர்கள் பஸ்சை ஓட்ட முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மோதிர மலையை சுற்றி சுமார் 14 மலை கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி காணி இன மக்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    குண்டும் குழியுமான சாலை

    மலைவாழ் மக்கள் பயிரிடப்படும் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு குலசேகரம் சந்தைக்கு தினமும் அரசு பஸ்சில் தான் வந்து செல்வார்கள். மேலும் அங்கு உள்ள மாணவ-மாணவிகளும் தங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அரசு பஸ்சை நம்பி தான் உள்ளார்கள்.

    கோதையாறு மலை கிராமத்தில் மின் உற்பத்தி நிலையம், அரசு ரப்பர் கழகம் மற்றும் பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் என ஏராளம் அரசு அலுவலங்களும் உள்ளன. மின்வாரிய அலுவலகத்தில் பணி புரிபவர்களின் குடியிருப்புகளும் உள்ளது.

    பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு வரை சுமார் 15 கிலோ மீட்டர் சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டம் நடத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த ஆண்டு மழைவாழ் மக்கள் அனைத்து கட்சியினருடன் பஸ் மறியல் போராட்டம் நடத்தினார்கள். காலையில் இருந்து மாலைவரை போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை சீரமைக்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்தன் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    அதன்பிறகு பெய்த கனமழையால் சாலை, மீண்டும் மிக மோசமாக பழுதடைந்து காணப்பட்டது. இரவு நேரங்களில் அரசு டிரைவர்கள் பஸ்சை ஓட்ட முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள். தற்போது இந்த சாலைகள் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு தரமற்ற நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் தரமற்ற இந்த சாலையில் அரசு பஸ்களை இயக்க மாட்டோம் என திருவட்டார் அரசு போக்குவரத்து கழக பணிமனை டிரைவர்கள் கூறியதை தொடர்ந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×