search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் பொதுமக்களுக்கு இடையூறாக டாரஸ் லாரிகள் செல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    ஆரல்வாய்மொழியில் பொதுமக்களுக்கு இடையூறாக டாரஸ் லாரிகள் செல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட திரளானோர் பங்கறே்பு
    • காவல்துறை மூலம் இந்த வழியாக செல்லுகின்ற லாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும்

    ஆரல்வாய்மொழி :

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மங்கம்மாள் சாலை வழியாக இரவு- பகலாக சுமார் 500-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்களும் பேரூராட்சி நிர்வாகமும் அதிகாரிகளுக்கு பல தடவை மனு கொடுத்தும் பலன் இல்லை. மேலும் வாகனம் செல்லக் கூடாது என்று எச்சரித்தும் வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.

    இதைக் கண்டித்து பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டார்கள்.

    இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த வழியாக டாரஸ் லாரிகள் செல்லும் போது பல்வேறு விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. தடுக்க வேண்டிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. தமிழகத்திலே பெறப்படுகின்ற மனுக்கள் குப்பை தொட்டிக்கு தான் செல்கிறது. பொதுமக்கள் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். உடனடியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் இந்த வழியாக செல்லுகின்ற லாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அடுத்த கட்டமாக இந்தப் பகுதி வழியாக வருகின்ற டாரஸ் லாரியை சிறை பிடிக்க போவதாக தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுதா பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் ஜெனட், சதீஷ்குமார், பாலமுருகன், மணி, நவமணி, ஜோசப் ரெத்தின ராஜ், ஏசுமணி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமலிங்கம், கச்சேரி நாகராஜன், கண்ணாடி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், எபநேசர், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×