என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
- சவுண்ட் சிஸ்டத்தில் விடுமுறை நாட்களில் உதவியாளராக செல்வது வழக்கம்
- தந்தை ஹரி கோபால் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு
கன்னியாகுமரி :
ராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளையைச் சேர்ந்தவர் ஹரி கோபாலன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 20). இவர் அருகில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். இவர் பிள்ளையார் விளையில் உள்ள ஒரு சவுண்ட் சிஸ்டத்தில் விடுமுறை நாட்களில் உதவியாளராக செல்வது வழக்கம். அது போல் நேற்று அவர் பிள்ளையார்விளையில் நடைபெற்ற திருமண விழா முடிந்து சவுண்ட் சிஸ்டத்தை அவிழ்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமாரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் வயிற்றில் கம்பி குத்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரின் தந்தை ஹரி கோபால் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.






