என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு
- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரம், சந்தையடி, சாமிதோப்பு, குலசேகரபுரம் வழியாக சுற்றுப்பாதையில் நாகர்கோவிலுக்கு தடம் எண் 1-டி என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று மதியம் 12 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பஸ்சை ஏழுசாட்டுபத்து கிராமத்தை சேர்ந்த டிரைவர் அழகேசன் (வயது 42) ஓட்டிச்சென்றார்.
கன்னியாகுமரி அருகே உள்ள அரசு பழத்தோட்டம் பக்கம் உள்ள பரமார்த்த லிங்கபுரம் தீயணைப்பு நிலையம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது அழகேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இருப்பினும் அவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.
இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கண்டக்டர் பொன்செல்வன் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தெரிவித்தார். அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று அழகேசனை மீட்ட னர். பின்னர் தீயணைப்பு வண்டியில் ஏற்றி கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அழகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.






