என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேலகிருஷ்ணன் புதூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
- தந்தைக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்து விட்டு தென்னந்தோப்பில் கிடந்தார்
- சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
மேலகிருஷ்ணன் புதூர் அருகே உள்ள நைனா புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரவீன் (வயது 24). இவர் பி.இ.4-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை பிரவீன் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறிவிட்டு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் பிரவீன் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பிரவீன் தந்தை முருகனுக்கு போன் செய்தார். அப்போது பக்கத் தில் உள்ள தென்னந்தோப்பில் அரளி விதையை தின்று விட்டதாக கூறினார். இதை கேட்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே முருகன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அங்கு பிரவீன் தென்னந்தோப்பில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி பிரவீன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான பிரவீன் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






