search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பெண் தர்ணா
    X

    நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பெண் தர்ணா

    • வாழை தோட்டம் விவகாரத்தில் புகார் கொடுத்தும் 4 மாதமாக அலைக்கழிக்கப்படுவதாக வேதனை
    • இழப்பீட்டுக்கு நஷ்டஈடாக ரூ.1½ லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எராளமானோர் வந்து மனுக்களை கொடுத்து வந்தனர். மனுக்கள் கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்தே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

    இந்த நிலையில் மனுவுடன் வந்த பெண் ஒருவர், திடீரென கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள், தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அப்போது அந்தப் பெண், தனக்கு சொந்தமான வாழை தோட்டம் தொடர்பாக கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் 4 மாதம் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார். அவரை சமரசம் செய்த போலீசார், அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் பெயர் ராதிகாகுமாரி என்பதும், மாங்கரை அருகே உள்ள கல்லுவிளை காட்டுவிளையைச் சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி என்பதும் தெரியவந்தது.

    அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்க கொண்டு வந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பாலூர் தேசம் பகுதியில் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் 350 வாழைகள் நட்டு விவசாயம் செய்துள்ளேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு, எனது கணவரின் தம்பி வின்சென்ட் அவரது மனைவி ஜெபராணி ஆகியோர் வந்தனர். அவர்கள் 150 வாழைக்குலைகளை வெட்டி சேதப்படுத்தினர். இதுபற்றி நானும் கணவரின் சகோதரி லிசியும் சென்று கேட்டபோது, வின்சென்ட் அவதூறு பேசி கொலைமிரட்டல் விடுத்தார்.

    இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் கருங்கல் போலீசில் புகார் செய்தேன். தாசில்தார், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தேன். ஆனால் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு, ஆன்லைன் மூலம் வின்செண்ட் பற்றி புகார் அளித்தேன். இருப்பினும் கடந்த 4 மாதங்களாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வின்சென்ட் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பீட்டுக்கு நஷ்டஈடாக ரூ.1½ லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×