search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் கடந்த 15 நாட்களில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி வந்த 100 டாரஸ் லாரிகள் பறிமுதல்
    X

    குமரியில் கடந்த 15 நாட்களில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி வந்த 100 டாரஸ் லாரிகள் பறிமுதல்

    • ரூ.25 லட்சம் அபராதம் வசூல்
    • அதிகாலை வேளைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு தினமும் டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. கனிம வளங்கள் அதிகபாரத்துடன் கொண்டு செல்லப்படுவதால் சாலைகள் சேதம் அடைவதுடன் விபத்துகளும் அதிக அளவு நடைபெற்று வருகிறது.

    எனவே அதிகபாரம் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் நகர பகுதியில் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் நுழைய தடை இருந்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளில் அதிக அளவு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி வழியாக இறச்சகுளம் களியங்காடு வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கனிம வள கடத்தலை கட்டுப்படுத்த இரவு, அதிகாலை வேளைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வரு கிறார்கள். அனுமதிஇன்றி கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 15 நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ.25 லட்சம் அபராத தொகையாக வசூல் ஆகியுள்ளது. அதிக பாரம் ஏற்றி வந்து பிடிபட்ட லாரிகள் அந்தந்த போலீஸ் நிலை யங்களின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அபராத தொகை கட்டிய பிறகு மட்டுமே அந்த லாரிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

    கோட்டார் பகுதியில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி கனிம வளங்களை கொண்டு சென்ற 9 டாரஸ் லாரிகள் பிடிபட்டது. அந்த லாரி டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிடிப்பட்ட லாரிகள் போலீஸ் நிலையத்தின் முன் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.

    இரவு நேரங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது காலை நேரங்களில் அதிக அளவு வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. நாகர்கோவில் நகர பகுதிகளிலும் காலை நேரங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    எனவே போலீசார் காலை நேரங்களிலும் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    Next Story
    ×