search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இன்று கடும் பனிப்பொழிவு
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் இன்று கடும் பனிப்பொழிவு

    • பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
    • மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சளித் தொல்லையால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. நேற்று இரவு கடுமையான பனிபொழிவு இருந்த நிலையில் அது இன்று காலை வரை நீடித்தது. அதிகாலை 8 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்ல தயாரான பொதுமக்கள் சிரமப்பட்டனர்.அரசு பஸ்களில் டிரைவர்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனம் ஒட்டி சென்றனர். எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் குளிரில் நடுங்கினர். குறிப்பாக கிராமப்புறங்களில் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டது.

    வயல்வெளி பகுதி களிலும் பனிபடர்ந்து இருந்தது. தேரூர், அரும நல்லூர், பூதப்பாண்டி, சுசீந்திரம், பொற்றையடி, அஞ்சுகிராமம் பகுதிகளில் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு குளிர் காற்று வீசியது. அதிகாலையில் பனிபொழிவு ஒருபுறம் இருக்க மதியம் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது.

    இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தின் காரணமாக பொதுமக்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். சளி தொல்லையின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சளி தொல்லை அதிகமாக இருப்பதால் வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கத்தை விட புறநோயாளிகளின் வருகை அதிகமாக உள்ளது .மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சளித் தொல்லையால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    Next Story
    ×