search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தாயார் மறைவுக்கு மவுன அஞ்சலி
    X

    மேயர் மகேஷ் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடந்ததை படத்தில் காணலாம். 

    நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தாயார் மறைவுக்கு மவுன அஞ்சலி

    • சாலை ஓரத்தில் கொட்டகை அமைத்து வியாபாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
    • நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் மீனாதேவ் பேசினார். பிரதமர் மோடி தாயார் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து மேயர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் பிரதமர் மோடி தாயார் மறைவையொட்டி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து கூட்டம் மீண்டும் நடந்தது. அப்போது 12-வது வார்டு கவுன்சிலர் சுனில்குமார் மேயர் மகேஷிடம் கோரிக்கை மனு கொடுத்தார். தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ரூ.22 லட்சம் செலவில் நகர நல்வாழ்வு பரிசோதனை மையம் கட்டப்பட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் எனக்கு அழைப்புகள் தரவில்லை. கல்வெட்டிலும் எனது பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக எனது வார்டு மக்களையும், என்னையும் அவமானப்படுத்தி உள்ளனர். இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    கவுன்சிலர் உதயகுமார் மாநகராட்சியில் உள்ள சில பிரச்சினைகளை தெரிவித்தார். அப்போது நீங்கள் உங்களது வார்டில் உள்ள பிரச்சனைகளை கூறுங்கள். மற்ற கவுன்சிலர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மேயர் மகேஷ் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கவுன்சிலர் உதயகுமாரை தி.மு.க. கவுன்சிலர்கள் முற்றுகையிட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் சாலைகள் குறுகலாக உள்ளது. அந்த பகுதியில் சாலை நடுவே தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு சாலை சீரமைப்பிற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விரைவில் போடப்பட உள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.40 கோடியில் ரூ.10 கோடி மண் ரோடுகளை சீரமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. 52 வார்டுகளிலும் என்னென்ன பணிகள் செய்யவேண்டும் என்பதை அறிந்து பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சாலையோர வியாபாரிகளை மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை ஓரத்தில் கொட்டகை அமைத்து வியாபாரம் செய்பவர்கள் மீது தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் அடுத்த மாதம் திறக்கப்படும்.

    அதைத் தொடர்ந்து நான்கு மண்டல அலுவலகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் கமிட்டி கூட்டங்கள் கூட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி , கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், நவீன் குமார், ரமேஷ், அய்யப்பன், வீரசூரபெருமாள், அனிலா சுகுமாரன், டி.ஆர்.செல்வம், உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×