search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் சவேரியார் ஆலயத்தில் 4 தேர்கள் பவனி

    • இன்று 10-ம் நாள் திருவிழா
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    நாகர்கோவில்:

    கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை மாலை நேரங்களில் திருப்பலி மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்து வருகிறது .விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.அதன்படி நேற்று முன்தினம் முதல் நாள் தேர் பவனியும் நேற்று இரண்டாவது நாள் தேர்பவனியும் நடந்தது.

    10-ம் திருவிழாவான இன்‌று காலை 6 மணிக்கு புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை யில் நடந்த ஆடம்பர கூட்டு திருப்பலியில் மறை மாவட்ட குருகுல முதல்வர் கிலாரியூஸ் மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல் ராஜ் மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் வட்டார முதன்மை பணியாளர் சகாய ஆனந்த் சவேரியார் ஆலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன் இணைப்பங்கு தந்தை ஆன்றோஜெராபின் முன்னாள் பங்கு தந்தை குருஸ் கார்மல் மற்றும் அருள் பணியாளர்கள் அருள் சகோதரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி திருவனந்தபுரம் உயர்மறை மாவட்டத்தை சேர்ந்த கிளாடின் அலெக்ஸ் தலைமையில் நடந்தது. இதைத் தொடர்ந்து தேர் பவனி நடந்தது.

    முதலாவதாக மிக்கேல் அதிதூதர் தேரும் 2-வதாக செபஸ்தியார் தேரும் மூன்றாவதாக சவேரியார் தேரும் நான்காவதாக ஜெபமாதா தேரும் இழுத்து வரப்பட்டது. அப்போது பொதுமக்கள் நேர்ச்சைக்கட னாக மெழுகுதிரி, மிளகு ஆகியவற்றை வழங்கி னார்கள்.மாலைகளும் வழங்கப்பட்டது. தேருக்கு பின்னால் பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தனர். ஆலயத்திலிருந்து தொடங்கிய தேர் பவனி தெற்கு ரதவீதி கம்பளம் ரயில்வே ரோடு வழியாக மீண்டும் சவேரியார் ஆலயத்தை இன்று இரவு வந்தடைகிறது. திருவிழாவை யொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் சவேரியார் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.

    வெளியூர்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.இதனால் காலை முதலே சவேரியார் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் ஆலயம் வரை உள்ள சாலையிலும் சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டமாக இருந்தது.

    திருவிழாவையொட்டி கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் ஆலயம் வரை உள்ள சாலைகளில் இருபுறமும் திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் ஆலயம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் மாற்று பாதை வழியாக இயக்கப்பட்டது.

    கூட்டம் அலைமோதி யதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலை மையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவிழாவை யொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. சவேரியார் ஆலயத்தில் இன்று இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.

    Next Story
    ×