என் மலர்
உள்ளூர் செய்திகள்

மொரசம்பட்டு அருகே சிதைந்து கிடக்கும் மண்ணுார் தார்சாலை.
கல்வராயன் மலையில் பழுதடைந்து கிடக்கும் கலக்காம்பாடி –மண்ணுார் மலைப்பாதைபொதுமக்கள் கடும் அவதி
- சின்ன கல்வராயன் மற்றும் பெரிய கல்வராயன் மலையில் 90க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
- கலக்காம்பாடியில் இருந்து மண்ணுார் வரையிலான 9 கி.மீ., மலைப்பாதையில் தார்சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து கிடக்கிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் சின்ன கல்வராயன் மற்றும் பெரிய கல்வராயன் மலையில் 90க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. கல்வராயன் மலையின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மண்ணுார், பெரண்டூர், மொரசம்பட்டி கிராமங்களுக்கு சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் கிடைக்காததால் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த கிராம மக்களின் நீண்ட நாள் போராட்டத்தின் விளைவாக, கடந்த 2018–-ல் மின்சாரம், சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, கலக்கம்பாடியில் இருந்து, மொரசம்பட்டி, பெரண்டூர் மற்றும் மண்ணுார் மலை கிராமங்களுக்கு, வாழப்பாடியில் இருந்து பேளூர், தும்பல், கருமந்துறை, பகுடுப்பட்டு வழியாக 2019-–ல் மினி பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டது.
தினந்தோறும் 3 முறை மட்டுமே மினி பஸ் இயக்கப்படுவதால், மற்ற நேரங்களில் பயணிப்பதற்கு இரு சக்கர வாகனங்களையும், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு சரக்கு வாகனங்களையும் இந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கலக்காம்பாடியில் இருந்து மண்ணுார் வரையிலான 9 கி.மீ., மலைப்பாதையில் தார்சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து கிடக்கிறது. இதனால், பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், விபத்து அபாயத்திலேயே பயணித்து வருகின்றனர்.
எனவே, பழுதடைந்து கிடக்கும் மலைப்பாதை தார்சாலையை புதுப்பிக்கவும், சிதைந்து கிடக்கும் தடுப்புச்சுவரை சீரமைக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






