என் மலர்
காஞ்சிபுரம்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. சென்னையில் அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுபோன்ற தொடர் கொலை சம்பவங்கள் மக்களிடத்தில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்படைகள் அமைத்து வன்முறையாளர்களை கண்காணித்து அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். சமூகவிரோதி என அடையாளம் கண்டு அவர்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும்.
தமிழகத்தில் போதை சாக்லெட் என்ற பேச்சுக்கே இடம் அளிக்கக்கூடாது. தமிழகம் முழுவதும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடத்த வேண்டும். மாணவர்கள் இருக்கும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
போதை சாக்லெட் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். இதை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பவர்களுக்கு உச்சகட்ட தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னையில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து வரும் பெண்களை குறி வைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
பட்டினப்பாக்கத்தில் நந்தினி என்ற ஆசிரியை ஏ.டி.எம்.-ல் ரூ.20 ஆயிரம் சம்பள பணத்தை எடுத்து வரும்போது கொள்ளையனால் பணம் பறிக்கப்பட்டது. அப்போது கொள்ளையனை துரத்தி சென்று பிடிக்க முயன்ற நந்தினி கீழே விழுந்து பலியானார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தாம்பரம் அருகே 2 இடங்களில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து வந்த பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு :-
பீர்க்கங்கரணை தங்க ராஜ்நகர் சோனியாகாந்தி தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி சுஜாதாகிறிஸ்டி. 2 பேரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள்.
இருவரும் நேற்றிரவு 8.30 மணிக்கு அங்குள்ள ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் நடந்து வந்த ஒரு வாலிபர் 500 ரூபாய்க்கு சில்லரை கேட்டான். இவர்கள் இல்லை என்று சொன்னதும் சுஜாதா கிறிஸ்டி கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கநகையை அவன் பறித்துக்கொண்டு ஓடினான். இவர்கள் திருடன்... திருடன்.. என்று கூச்சல் போட்டனர்.
ஆனால் அதற்குள் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த கூட்டாளியின் மோட்டார் சைக்கிளில் கொள்ளையன் ஏறி தப்பிச் சென்று விட்டான்.
நகையை பறிகொடுத்த சுஜாதா கிறிஸ்டி பீர்க்கங்கரனை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் சத்தியா (வயது 21). தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு 9 மணி அளவில் சேலையூரில் உள்ள ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து விட்டு நடந்து சென்றார்.
அப்போது கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் அவரது பர்சை பறித்தார். ஆனால் சத்தியாவிடம் இருந்து பர்சை தட்டிப்பறிக்க முடியவில்லை. இதனால் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 1 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடினான்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த திருடனை விரட்டி பிடித்து சேலையூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்டவன் பெயர் ஜெயக்குமார் என்றும், கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது. போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த மெர்சி ஈஸ்வரி (வயது24). சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். நந்தம்பாக்கம் கலைஞர் நகரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார்.
அதே ஆயுதப்படையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச்சேர்ந்த மாலிக்பாஷா (25) போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
போலீஸ்காரர் மாலிக் பாஷாவும், பெண் போலீஸ் மெர்சி ஈஸ்வரியும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் மாலிக்பாஷா, மெர்சி ஈஸ்வரியை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புகார் செய்வதற்காக மெர்சி ஈஸ்வரி சில பெண்களுடன் சேர்ந்து நேற்று மாலை பரங்கிமலை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். போலீசில் புகார் தெரிவித்து விட்டு வெளியே வந்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவர் விஷம் குடித்ததால் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
அவரை பரங்கிமலை பெண் போலீசார் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மெர்சி ஈஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் நானும் போலீஸ்காரர் மாலிக்பாஷாவும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவருமே நெருங்கிப் பழகினோம். இருவரும் கணவன்-மனைவி போல ஒன்றாக வாழ்ந்தோம். இதனால் இருமுறை நான் கருக்கலைப்பு செய்துள்ளேன்.
என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாலிக்பாஷாவிடம் வற்புறுத்தினேன். அவர் அதற்கு மறுத்து விட்டார்.
கடந்த 5-ந்தேதி அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். அங்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக அறிந்தேன். அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மாலிக்பாஷாவை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண் போலீஸ் மெர்சி ஈஸ்வரி 1 வருடத்துக்கு முன்பு பள்ளிக்கரணையில் உள்ள ஒரு பள்ளியில் பாதுகாப்பு பணிக்கு சென்றார். அப்போது எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார்.
இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது மாலிக் பாஷா என்னை திருமணம் செய்ய மறுத்ததால் எலி மருந்து தின்றதாக மெர்சி ஈஸ்வரி தெரிவித்தார். மாலிக் பாஷாவை அழைத்து இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் மெர்சி ஈஸ்வரியை நான் காதலிக்கவில்லை. என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார். புகார் உண்மையாக இருந்தால் என் மேல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
இதையடுத்து மெர்சி ஈஸ்வரியை இன்ஸ்பெக்டர் சமாதானம் செய்தார்.
அதன் பிறகு மெர்சிஈஸ்வரி சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து மாலிக் பாஷா மீது புகார் செய்தார். மெர்சி ஈஸ்வரி நந்தம்பாக்கம் கலைஞர் நகரில் வசிப்பதால் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு கூறி போலீசார் அனுப்பினர்.
இதையடுத்து 4 மாதத்துக்கு முன்பு அவர் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று மாலிக்பாஷா மீது புகார் செய்தார். போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
மாலிக்பாஷா மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் மெர்சிஈஸ்வரி நேற்று பெண்களுடன் சென்று பரங்கிமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
மாமல்லபுரம் டி.கே.எம். சாலையில் வசித்து வந்தவர் லோகநாதன் என்ற காமராஜ்(வயது 56). இவர், திருக்கழுக்குன்றம் சாலையில் காய்கறி மொத்த விற்பனை கடை வைத்து உள்ளார்.
இவர், நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது சென்னையில் இருந்து திருக்கழுக்குன்றத்துக்கு மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லோகநாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், மின் கம்பத்தில் தலை மோதியதில் படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் லோகநாதனை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், லோகநாதன் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
நெமிலி:
நெமிலி அருகே உள்ள கீழ்வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் தாமோதரன் (வயது 27), ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ந் தேதி வேலைக்கு சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இது குறித்து நெமிலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தாமோதரனை தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்ததால் மோசமான வானிலை நிலவியது.
இதனால் மும்பையில் இருந்து சென்னைக்கு இரவு 10.15 மணிக்கு வந்த ஏர் இந்தியா விமானமும், டெல்லியில் இருந்து சென்னைக்கு இரவு 11.25 மணிக்கு வந்த இண்டிகா விமானமும் பெங்களூர் திருப்பி விடப்பட்டன.
மேலும் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் ஐதராபாத், கொல்கத்தா, புனே, கொழும்பு, துபாய் மற்றும் உள்நாட்டு விமானங்கள் உள்பட 7 விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானத்திலேயே வட்ட மடித்தன.
பின்னர் ஓடுபாதையில் தண்ணீர் அகற்றப்பட்ட பிறகு 7 விமானங்களும் தாமதமாக ஒவ்வொன்றாக தரை இறங்கின.
சென்னையில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ஆதம்பாக்கத்தில் நடந்த சம்பவம் வருமாறு:-
ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவை சேர்ந்தவர் காந்திமதி ஓய்வுபெற்ற ஆசிரியை.
இவர் நேற்று பார்த்தசாரதி நகர் 11-வது தெருவில் உள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டு இரவு 9½ மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள மெயின் ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காந்திமதி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத காந்திமதி செயினை ஒரு கையால் பிடித்தபடி திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் செயினை முரட்டுத்தனமாக இழுத்து பறித்துச் சென்றனர்.
இதில் கழுத்தில் காயம் அடைந்த காந்திமதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காந்திமதிக்கு உதவினார்கள். போலீஸ் நிலையத்திலும் நடந்த சம்பவம் பற்றி புகார் தெரிவித்தனர்.
இதே பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பும் 65 வயது பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. அதில் இன்னும் திருடர்கள் பிடிபடவில்லை. இந்த நிலையில் மீண்டும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளதால் பெண்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர் ராஜீவ் நகரில் சில நாட்களுக்கு முன்பு ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இடித்து தள்ளி கீழே விழச் செய்தனர். பின்னர் அந்த பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து கழுத்தில் கிடந்த நகையை பறித்துச் சென்று விட்டனர். இதிலும் இன்னும் திருடர்கள் பிடிபடவில்லை.
அம்பத்தூர், ராஜீவ்நகர், திருமலைபிரியாநகர், பானு நகர் உள்ளிட்ட பகுதி களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்ய முடியாமல் திணறி வரும் நிலையில் ஆதம்பாக்கத்திலும் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறுவது போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மாமல்லபுரம் டி.கே.எஸ். சாலையில் காய்கறி கடை நடத்தி வருபவர் லோகநாதன் (வயது 56). நேற்று இரவு மாலமல்லபுரம் சிற்ப கல்லூரி எதிரே ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது சென்னையில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து லோகநாதன் மீது மோதியது. மேலும் கார் இரண்டு முறை சாலையில் சுற்றி அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி நின்றது.
இதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். மோதிய வேகத்தில் காரில் இருந்த பாதுகாப்பு பலூன் விரிந்ததால் அதிலிருந்த டிரைவர் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வர் மோகன் (33). இன்று காலை அவர் நண்பர் லோகேஷ், மகேசுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்றார். பூண்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த ஜீப் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோகன் பலியானார். பலத்த காயம் அடைந்த லோகேஷ், மகேசுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.






