என் மலர்
காஞ்சிபுரம்
தாம்பரம் கடப்பேரி மவுலானா நகரை சேர்ந்தவர் சற்குணம் (31). அ.தி.மு.க. தொண்டரான இவர் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் சற்குணம் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அடிக்கடி அவர் பேசி வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு தாம்பரம் சானடோரியத்தில் ஏற்றுமதி வளாகம் அருகில், சற்குணம் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். நடுரோட்டில் உடலில் தீபிடித்த நிலையில், முதல்-அமைச்சர் அம்மா விரைவில் குணம் அடைய வேண்டும் என்று கோஷமிட்ட படியே அங்குமிங்கும் ஓடினார்.
சற்குணம் தீக்குளித்த இடத்தின் அருகில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. அங்கு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று சற்குணத்தின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அவரது உடல் கருகியது.
பலத்த காயங்களுடன், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சற்குணம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சற்குணம் கொண்டு செல்லப்பட்டார். நேற்று இரவு 8.15 மணி அளவில் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சற்குணத்தின் உடல் நிலை மோசமானது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 11 மணி அளவில் சற்குணம் பரிதாபமாக உயிரிழந்தார்.
சற்குணத்துக்கு ஷீலா என்ற மனைவியும், 4 வயதில் காயத்ரி என்கிற மகளும் உள்ளனர்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்திய அரசால் தேசிய நதிநீர் கட்டுப்பாடு மசோதா கொண்டு வர இருக்கிறது. அதனுடைய அறிக்கையை இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை.
ஆனால் நிச்சயமாக காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்யாது.
ஒரு சந்தோஷமான விஷயம். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்றைய தினம் தன்னுடைய கட்சியின் தலைவர்களிடம் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடலாமா என்று கேட்டு இருக்கிறார்.
அதில் 99 சதவீதம் பேர் தனித்து போட்டியிடலாம் என்று கருத்து சொல்லி இருப்பது அவர்களுடைய கட்சி விவகாரம். ஆனாலும் வரவேற்கத்தக்கது. இதை தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி இருக்கிறேன்.
அனைத்து கட்சிகளும் தங்களுடைய சுய பலத்தை நிரூபிக்க உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று கூறி இருக்கிறேன்.
குளச்சல் துறைமுகம் எக்காரணத்தை கொண்டும் தடைப்படாது. கண்டிப்பாக தமிழக மக்கள் நலன் கருதி குளச்சல் துறைமுகம் கொண்டு வரப்படும். இதற்கு ஆரம்பத்தில் இருந்தே நெடுமாறன் ஆதரவு தெரிவித்து வருகிறார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தவர் கவுதம் (வயது 22). இவரது சொந்த ஊர் திருச்சி, கே.கே.நகர் பகுதி ஆகும்.
கவுதம், பள்ளிக்கரணையில் நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்ற அவர் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
பின்னர் அவர் தாம்பரம் சானடோரியத்தில் வசிக்கும் காதலியான உடன் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரது வீட்டிற்கு சென்றார். இருவரும் வீட்டின் 3-வது மாடியில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது கல்லூரி மாணவியை அவரது சகோதரி ஒருவர் அழைத்தார். உடனே மாணவி கீழே இறங்கி சென்றார். இதற்குள் பயந்து போன கவுதம் ஓடியதாக தெரிகிறது.
இதில் நிலை தடுமாறிய அவர் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த கவுதம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி இன்று அதிகாலை விமானத்துக்கு தேவையான ‘ஒயிட்’ பெட்ரோல் ஏற்றிய டேங்கர் லாரி சென்று கொண்டு இருந்தது. சங்கராபுரத்தை சேர்ந்த டிரைவர் அன்புமணி, லாரியை ஓட்டினார். கிளீனராக அன்பழகன் இருந்தார்.
இந்த நிலையில் காலை 5 மணி அளவில் காஞ்சீபுரத்தை அடுத்த சேக்காங்குளம் அருகே சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டேங்கரில் இருந்த பெட்ரோல் கசிந்தது. அதிர்ச்சி அடைந்த டிரைவரும், கிளீனரும் உடனடியாக தாவிக்குதித்து வெளியே வந்தனர்.
தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் வெளியே கொட்டி இருந்த பெட்ரோல் மீது ‘போம்’ எனப்படும் ரசாயன நுரையை பீய்ச்சி அடித்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் கிடந்த லாரியை மீட்டனர். விபத்து நடந்ததும் தீப்பிடிக்காததால் அதிர்ஷ்டவசமாக டிரைவரும், கிளீனரும் உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு பணியின் போது முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
இந்த விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர், உசேன் சுபேதா தெருவில் நேற்று மாலை தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சரிபுல்லாவை பொதுமக்கள் விரட்டி பிடித்து பரங்கிமலை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவன் ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள குடிசையில் நண்பர் அப்துல்வகாப்புடன் தங்கி இருந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் அவனது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த 196 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் ரூ.91 ஆயிரத்து 700 நல்ல ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் அப்துல்வகாப் தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் ஆலந்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அப்துல்வகாப்பை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.
கைதான இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மெட்ரோ ரெயில் பணிக்காக மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வந்து உள்ளனர். அவர்கள் ஆலந்தூர் பகுதி முழுவதும் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
அவர்களுக்கு மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஒரு கும்பல் கள்ள நோட்டுகளை மாற்ற கொடுத்து இருக்கிறார்கள். இதற்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கொடுக்கப்பட்டு உள்ளது.
சரிபுல்லா, அப்துல்வகாப் ஆகியோருடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்-யார்? எந்தெந்த பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்று விசாரித்து வருகிறார்கள். மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை தெற்குபட்டு கடற்கரையில் தாம்பரத்தை சேர்ந்த 12 பேர் நண்பரின் பிறந்த நாளையொட்டி மது விருந்து வைத்தனர். அப்போது அவர்கள் பலத்த சத்தத்துடன் பாட்டு வைத்து நடனமாடியதாக தெரிகிறது.
இதனை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் தட்டிக் கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 3 மோட்டார் சைக்கிள்களும் நொறுக்கப்பட்டன.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதற்குள் மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகன் குமார், குமார், நந்தகுமார், காமேஷ், பிரதீப் நாராயண் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:
விழுப்புரத்தை சேர்ந்தவர் சேகர் (41). இவர் நேற்று இரவு ஆலந்தூரில் சவாரி ஏற்றிக்கொண்டு கிண்டி கத்திபாரா நோக்கி சென்று கொண்டிருந்தார். சிமெண்ட் சாலை சந்திப்பில் வந்த போது எதிரே வந்த மினிலாரி கார் மீது மோதியது. பின்னர் அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த 5 பேரும், லாரியில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 9 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷ், கார் டிரைவர் சேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
மறைமலைநகர் பகுதியில் போலீஸ்காரர்கள் கார்த் திக், சுந்தர், செல்வம், சதீஷ், முருகன் ஆகிய 5 பேர் நேற்று இரவு ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சிங்கப்பெருமாள் கோவில் வரை சென்றுவிட்டு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மறைமலைநகரை அடுத்த பேரமனூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் போலீஸ்காரர்கள் கார்த்திக் உள்பட 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜீப் கவிழ்ந்த போது அருகே மற்ற வாகனங்கள் வராததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் கமல் (வயது 37). வியாபாரி. இவர் வேலூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்த மனைவியை அழைத்து வர காரில் சென்றார்.
காஞ்சீபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் சென்றபோது சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது திடீரென கார் மோதியது. இதில் கமல் படுகாயமடைந்தார்.
அவரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து பாலுசெட்டி சத்திரம் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூரை அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி விஜயா (26). விவசாயிகளான இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம் போல் விஜயா மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.
மாலையில் மாடுகளுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டி சண்டையிட்டன. ஒரு மாட்டின் கயிற்றை பிடிக்க விஜயா ஓடியபோது தவறி கீழே விழுந்தார்.
இதில் மாட்டின் கயிறு அவரது கழுத்தில் சுற்றிக் கொண்டது. மாடு மிரண்டு ஓடியதால் கழுத்து இறுகி விஜயா பரிதாபமாக பலியானார். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை, விமான நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையத்தில் பணிகள் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தொழிலாளர்களை அடிக்கடி இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட சுமார் 60-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும். சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பிட்ட தொழிலாளர்களை பழி வாங்கும் நடவடிக்கையாக இடமாற்றம் செய்வதாவும். இது பற்றி கேட்டால் ஒப்பந்த தாரர்கள் மிரட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
அப்போது திடீரென போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தொழிலாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி விமான நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வசந்தி. இவர் நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீடு திரும்ப ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்தி நின்றார்.
அப்போது மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது. அது சாலையில் தாறுமாறாக ஓடி பஸ்நிலையத்தில் நின்ற வசந்தி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் தறிகெட்டு ஓடிய கார் அங்கு நின்ற ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த துரைப்பாக்கத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ, விக்டோரியா உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து கார் டிரைவர் ராயப்பேட்டையை சேர்ந்த சார்லஸ் அந்தோணியை கைது செய்தனர்.






