என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    நாடு முழுவதும் அனைத்து துறைமுகங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    புதுடெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கூடங்குளம் அணுமின் நிலையம் உரிய பாதுகாப்புடன் இருக்கிறது. அதில் இருந்து மின் உற்பத்தி நாட்டுக்கு தேவைப்படுகிறது. அதனுடைய முனையங்கள் முழுமையாக பூர்த்தி அடைந்து இருக்கிறது.

    பா.ஜனதா போல் அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் அரசியல் சூழ்நிலை நன்றாக இருக்கும். இது என்னுடைய கருத்து. தமிழக அரசுக்கு நல்லது. நாட்டில் உள்ள அனைத்து துறை முகத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி முயற்சி எடுத்து வருகிறார்.

    அதில் நாங்களும் வெளி நாட்டின் உதவிகளை பெற்று துறைமுகங்களை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம். அது நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்துக்கும் உயர்வாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பா.ஜனதா கலந்து கொள்ளாது என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் அக்கறையாக நடக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.

    இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. மத்திய அரசு சட்ட திட்டத்துக்கு உட்பட்டுதான் அணுக முடியும். தமிழக மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தி.மு.க.-காங்கிரஸ் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது அரசியல் காரணத்துக்காகத்தான் என்பதை துணிச்சலாக சொல்கிறேன்.

    இன்றைய கால கட்டத்தில் தி.மு.க. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி என்ன செய்ய போகிறார்கள்? தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பா.ஜனதா அதில் பங்கேற்கும்.

    தி.மு.க. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பா.ஜனதா கலந்து கொள்ளாது. இது அவர்களுடைய பொறுப்பு அல்ல. தமிழக அரசின் பொறுப்பு.

    முதல்-அமைச்சர் உடல் நலகுறைவால் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி தண்ணீர் பெற்று தந்தது உண்மைதான்.

    மத்திய அரசு கண்டிப்பாக காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு நல்லது செய்யும்.

    காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கருணாநிதி அறிவுறுத்தலின் பேரில் இன்று மாலை தி.மு.க எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுக்க இருக்கிறோம் என்று கனிமொழி பேட்டியளித்தார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க எம்.பி கனிமொழி இன்று காலை டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவுறுத்தலின் பேரில் இன்று மாலை தி.மு.க எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுக்க இருக்கிறோம்.

    தண்ணீர் இன்றி ஏற்கனவே 11 லட்சம் விவசாய நிலங்கள் பாழாகி விட்டது. சம்பா குருவை வீணாகி விட்டது. விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றமும், நடுவர் ஆணையமும் இடைக்கால நிவாரணமாக தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தும், கர்நாடகம் அதை வழங்கவில்லை.

    கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நடந்து கொள்கிறது. அந்த அரசின் நிலைப்பாடு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர் மறையாகவே உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய இடைக்கால நிவாரணமான தண்ணீரையாவது காவிரியில் திறந்து விட குடியரசு தலைவரை சந்திக்கும் போது வலியுறுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மறைமலைநகர் அருகே தடுப்பு சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் பலியாகினர், மாணவி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சர்மா சிங் (19), சுமம் சிங் (18), நில்குண்டேல் (19), இமாசல பிரதேசத்தை சேர்ந்த நிலு (19) மற்றும் சித்தர் சிங் (19) ஆகியோர் மறைமலைநகர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர்.

    இன்று காலை 5 மணி அளவில் டீ குடிக்க காரில் வீரபுரத்தில் உள்ள தொழில் நுட்ப பூங்காவிற்கு சென்றனர். இவர்களுடன் கல்லூரி மாணவி சிலாங்கீர் (19) என்பவரும் சென்றார்.

    டீ குடித்து விட்டு மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே காரில் வேகமாக வந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சர்மா சிங், சுமம் சிங், நில்குண்டேல் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த நிலு, சித்தர் சிங், சிலாங்கீர் ஆகியோரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக எஸ்.டி. பி.ஐ. கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி கிண்டி ரேஸ் கோர்சில் இருந்து கவர்னர் மாளிகைக்கு மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் தலைமையில் பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது போலீசார் பாதியில் தடுத்து நிறுத்தினர். பின்னர் மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், பொதுச்செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 100 பேரை கைது செய்தனர்.
    தாம்பரத்தில் மொபட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த பீர்க்கங்கரணை தூரத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரண்யா. இவர் தாம்பரத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை நிறுவனத்தின் பணம் ரூ.50 ஆயிரத்தை வசூலித்து தனது மொபட்டில் சீட் அடியில் வைத்தார். பின்னர் தாம்பரத்தில் உள்ள பள்ளிக்கு அண்ணன் மகனை அழைத்து வர சென்ற அவர் பள்ளி முன்பு மொபட்டை நிறுத்தினார். திரும்பி வந்த போது மொபட் சீட் விலகி இருந்தது. மர்ம நபர் ரூ.50 ஆயிரம் 4 செல்போன்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து பீர்க்கங்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    இதேபோல் திருநீர்மலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் டெய்லர். இவர் நேற்று மதியம் குரோம் பேட்டையில் உள்ள வங்கியில் ரூ.45 ஆயிரம் எடுத்தார்.

    பணத்தை மொபட்டின் சீட் அடியில் வைத்து வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் வண்டியை நிறுத்தி டீக் கடையில் டீ குடித்துவிட்டு சென்றார்.

    வீட்டுக்கு வந்து பார்த்த போது மொபட்டில் இருந்து பணம் மாயமாகி இருந்தது.

    ராஜேந்திரன் வங்கியில் இருந்து பணம் எடுப்பதை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்து திருடி உள்ளனர். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    நந்தம்பாக்கத்தில் ராணுவ வீரர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    நந்தம்பாக்கம் ராணுவ குடியிருப்பில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (வயது 77). ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜோலா முகி (72) இவர்களின் மகன்கள் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். எனவே, சுப்பிரமணியனும், ஜோலா முகியும் தனியாக வசித்து வந்தனர்.

    நேற்று இரவு சுப்பிரமணியனும் அவரது மனைவியும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோ இருந்த அறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    காலையில் சுப்பிரமணியன் எழுந்து பார்த்த போது தான் கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது. சுப்பிரமணியனுக்கும் அவரது மனைவிக்கும் வயதாகி விட்டதால் சரிவர காது கேட்க வில்லை. இதை பயன்படுத்தி கொள்ளையர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    அச்சரப்பாக்கம் அருகே 4 வாகனங்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுராந்தகம்:

    தொடர்விடுமுறைக்கு பின்னர் தென்மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவு உள்ளது.

    இன்று காலை அச்சரப்பாக்கத்தை அடுத்த தொழுப்பேடு சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது சென்னை நோக்கி வந்த கார் வேகத்தடையில் மெதுவாக ஏறி இறங்கியது.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த 2 அரசு பஸ்கள் மற்றும் மற்றொரு வாகனம் கார் மீது அடுத்தடுத்து மோதின.

    இதில் காரில் இருந்த 3 பேர் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய 4 வாகனங்களும் சேதம் அடைந்தன.

    உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு மதுராந்தகம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவளம் அருகே மின்கம்பம் மீது கார் மோதலில் 6 மாணவர்களும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மாமல்லபுரம்:

    கோவளத்தை அடுத்த வட நெம்மேலி முதலை பண்ணை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக கார் வந்தது.

    திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் இறங்கி 25அடி உயரத்துக்கு பறந்து சென்று அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்தன.

    காரில் இருந்த 6 வாலிபர்களும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அப்பகுதிமக்கள் அவர்களை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மணைக்கு அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்தவர்கள் அனைவரும் செங்குன்றம், அம்பத்தூர், பட்டாபிராம், பகுதிகளை சேர்ந்த முகமதுகாலித், பிரதீப், தமிழ்வாணன்,ஜெகன்,தீபன், ராமகிருஷ்னன் என்றும், அவர்கள் வெளிநாட்டுக்கு மருத்துவ படிப்புக்கு செல்ல இருந்த கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    அவர்கள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த போது விபத்தில் சிக்கி கொண்டனர். காரின் முன்பகுதியில் உள்ள பாதுகாப்பு பலூன் விரிந்ததாலும் கார் மீது மின்சார கம்பிகள் விழாமல் இருந்ததாலும் 6 மாணவர்களும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மின்கம்பம் உடைந்ததால் கோவளம் பகுதியில் 5 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமழிசை அருகே நடை பயிற்சி சென்ற ஊராட்சி தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செவ்வாப்பேட்டை:

    திருமழிசையை அடுத்த மேல்மனம்பேடு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் தங்கராஜ் (வயது 49) மேல்மனம்பேடு ஊராட்சி தலைவராக இருந்தார்.

    இவரது மனைவி நிறை மதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. தங்கராஜ் அதே பகுதியில் செங்கல் சேம்பர் தொழில் செய்து வந்தார்.

    இன்று அதிகாலை தங்கராஜ் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் வெங்கடேஷ், மணி ஆகியோருடன் பட்டாபிராம் சாலையில் நடை பயிற்சி சென்றார்.

    அரசு பள்ளி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கும்பல் திடீரென அவர்களை வழி மறித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் உள்பட 3 பேரும் உயிர் தப்பி ஓட்டம் பிடித்தனர். தங்கராஜை மட்டும் குறி வைத்த கொலை கும்பல் அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். மற்ற 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    தலை, கழுத்து, முதுகில் பலத்த காயம் அடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் கொலைக் கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், டி.எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

    தங்கராஜ் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளவேடு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொலையுண்ட தங்கராஜ் 2 முறை ஊராட்சி தலைவராக இருந்து உள்ளார். தற்போது மேல்மனம்பேடு ஊராட்சி தலைவர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து அவர் தங்கையை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்து இருந்தார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மேலும் கடந்த 1998-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலையில் தங்கராஜிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த முன்விரோதத்தில் கொலை நடந்ததா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதேபோல் தங்கராஜ் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்ததாக தெரிகிறது. இதில் யாருடனும் மோதல் உள்ளதா? அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. வெள்ளவேடு சி.டி.எச். சாலை மற்றும் மேல்மனம்பேடு பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    நடை பயிற்சி சென்ற ஊராட்சி தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பஸ் சக்கரத்தில் சிக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த திருமங்கலம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மகன் அரிஹரன் (வயது 12). பன்னூரில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    அரிஹரன் இன்று காலை வழக்கம் போல் சுங்குவார் சத்திரத்தில் இருந்து அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பக்க படிக்கட்டில் நின்றார்.

    பஸ் சிறிது தூரம் சென்ற போது திடீரென அரிஹரன் தவறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அரிஹரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிண்டி மேம்பாலம் அருகே தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் இறந்தனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய தண்ணீர் லாரி டிரைவரான விருதுநகரைச் சேர்ந்த ராஜேந்திரன்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆஷாசுருதி(வயது 19). இவர், கிண்டி செல்லம்மாள் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சித்ரா(19). இவர், அதே கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டும், போரூர் பகுதியை சேர்ந்த காயத்ரி(20) அதே கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டும் படித்து வந்தனர்.

    இவர்களுடன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளான திருநின்றவூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ(19), போரூரைச் சேர்ந்த மீனா(19) ஆகியோர் நேற்று மதியம் கிண்டி ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கிண்டி ஹால்டா அருகே உள்ள கல்லூரிக்கு சாலையோரம் உள்ள நடைபாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கிண்டியில் இருந்து சின்னமலை நோக்கி சென்ற குடிநீர் வாரிய ஒப்பந்த தண்ணீர் லாரி ஒன்று அந்த வழியாக வேகமாக சென்றது.

    மேம்பாலத்தில் இருந்து இறங்கியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பிரேக் பிடிக்க முடியாமல் தாறுமாறாக ஓடிய அந்த லாரி, நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீது பயங்கரமாக மோதியது.

    மேலும் அந்த லாரி, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆமணக்குட்டன்(38) என்பவர் மீதும் திருமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(53) என்பவரின் ஆட்டோ மீதும் மோதியது. நடந்து சென்ற மேலும் ஒருவர் மீது மோதி விட்டு தொடர்ந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்ற தண்ணீர் லாரியை நிறுத்திவிட்்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

    லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் ஆஷாசுருதி, சித்ரா, காயத்ரி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மாணவிகள் ஜெயஸ்ரீ, மீனா மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆமணக்குட்டன் உள்பட 4 பேரும் காயம் அடைந்தனர். லாரி மோதியதில் சுப்பிரமணியின் ஆட்டோ சேதம் அடைந்தது.

    மாணவிகள் பலியான சம்பவம் பற்றி அறிந்ததும் கல்லூரி மாணவிகள் அனைவரும் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்து வந்த தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் அன்பு மற்றும் போலீசார் பலியான ஆஷாசுருதி, சித்ரா, காயத்ரி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த மாணவிகள் ஜெயஸ்ரீ, மீனா மற்றும் ஆமணக்குட்டன் உள்பட 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த பயங்கர விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதற்கிடையில் மாணவிகள் பலியானதால் ஆத்திரம் அடைந்த செல்லம்மாள் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள், ஊழியர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கிண்டி ஹால்டா அருகே சின்னமலை நோக்கி செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும். செல்லம்மாள் கல்லூரி அருகே பஸ் நிறுத்தம், கல்லூரி பகுதி என சாலையில் வர்ணங்கள் ஏற்படுத்த வேண்டும். வேகத்தடை அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபட்ட பேராசிரியைகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள், “எங்கள் கல்லூரிக்கு மாணவிகள் வந்து செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். போக்குவரத்து போலீசாரும் இருப்பது இல்லை. இந்த பகுதிகளில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் எங்களுக்கு பயமாக உள்ளது. வேகத்தடை, பஸ் நிறுத்தம், சிக்னல் அமைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” எனக்கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், “இது பற்றி பேசி நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிட்டு கல்லூரி வளாகத்துக்குள் வாருங்கள்” என கூறினார்.

    இதையடுத்து கல்லூரி பேராசிரியைகள், ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்குள் சென்றனர். அங்கு பேராசிரியைகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.

    அப்போது கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, “ ஏற்கனவே இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் கல்லூரி நேரங்களில் போக்குவரத்து போலீசார் யாரும் நிற்பது இல்லை. கல்லூரி அருகே சிக்னல் அமைக்கவேண்டும். பஸ் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

    இதையடுத்து போலீசார், எந்தந்த பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு மாணவிகள் வருகிறார்களோ அந்த பகுதிகளில் இருந்து வரும் மாநகர பஸ்கள் கல்லூரிக்கு அருகே நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து சிக்னல் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி நேரங்களில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் வேகத்தடை அமைப்பது பற்றி விவாதிக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த சம்பவங்களால் கிண்டியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 279, 337, 304(ஏ) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய தண்ணீர் லாரி டிரைவரான விருதுநகரைச் சேர்ந்த ராஜேந்திரன்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலை விபத்துகளில் உயிர் பலி ஏற்பட்டால் உடனடியாக விபத்து ஏற்படுத்திய டிரைவரின் லைசென்சு பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைக்கப்படும். முதல் விபத்தாக இருந்தால் 6 மாத காலத்துக்கு வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கப்படும். 2-வது முறையாக விபத்து ஏற்படுத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட லைசென்சு நீதிமன்றத்துக்கு அனுப்பி லைசென்சை ரத்து செய்ய உத்தரவு கோரப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து கே.கே.நகர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.

    லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானதால் நேற்று மாலை நேர கல்லூரிக்கும், இன்று(வெள்ளிக்கிழமை) கல்லூரிக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக செல்லம்மாள் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    ×