என் மலர்
காஞ்சிபுரம்
ஜெர்மனி நாட்டை சேர்ந்த லோமன் ஜென்னு என்ற பெண் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை கடத்தி கற்பழித்தது.
இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே மீனவர்கள் 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
லோமன் ஜென்னு முன்பு அவர்களை காட்டி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அவர்கள் 4 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று லோமன் ஜென்னு கூறினார். இதையடுத்து 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் லோமன் ஜென்னு விமானம் மூலம் வாரணாசிக்கு சென்றார். குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களின் புகைப்படத்தை அவருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்த 5 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமனி தலைமையில் தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள கடலூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பா ஆகிய பகுதிகளில் இருந்து 5 பெண்கள் சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு சென்றனர். அங்கு கடந்த சில ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த இவர்கள் 5 பேரையும் அங்கிருந்த தன்னார்வ அமைப்புகள் மீட்டனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ரியாத்தில் இருந்து நேற்று முன்தினம் அவர்கள் 5 பேரும் டெல்லிக்கு வந்தனர். அங்கிருந்து கடலூர் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 30 மற்றும் 32 வயது பெண்கள் 2 பேர் மட்டும் விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் இருவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்.
மீதம் உள்ள 3 பெண்களும், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
காஞ்சீபுரம்:
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 42-வது வட்டம் எம்சிஎம் கார்டன் 3 வது தெரு மற்றும் ஆரணி கெங்கன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அப்பகுதிகளின் தேர்தல் பொறுப்பாளரும் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி காஞ்சீபுரம் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் அ.இ.அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னத்திற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.
வேட்பாளர் மதுசூதனனுடன் அப்பகுதிகளில் பெண்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், கூலித் தொழிலாளர்கள், மீனவர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடம் சென்று இரட்டை விளக்கு மின் கம்பத்திற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது எளிமையின் இலக்கணமாக விளங்கி அம்மாவின் அரசியல் வாரிசாக உள்ள ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மண்ணின் மைந்தன் மதுசூதனனுக்கு இரட்டை விளக்கு மின்கம்ப சின்னத்திற்கே எங்கள் வாக்குகள் என உறுதி அளித்தனர்.
வாக்கு சேகரிப்பில் காஞ்சீபுரம் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், நாகம்மாள், வழக்கறிஞர் கண்ணன், டி.யோகனந்தம், என்.சிதம்பரம், டபிள்யூ.கே.சரவணன், ஆர்.ஜெயகாந்தன், நீலமேகம், மஹப்பு ஷெரீப், சீனிவாசன், முனுசாமி, நத்தப்பேட்டை வினோத், ஏரிவாய் சுரேஷ், பிரஸ் குமார், பன்னீர்செல்வம், பிள்ளையார்பாளையம் ராஜேந்தரன், வி.நாகராஜ் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் நகர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 12 கடைகள் மூடப்பட்டது.
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில் சன்னதி தெரு பழைய ரயில் நிலையம் அருகே ஒரு கடையும், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகே இரு கடைகளும் என 3 கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன கடந்த 2 தினங்களுக்கு முன் பெண்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக காமாட்சியம்மன் கோயில் சன்னதி தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இதனால் தற்போது இயங்கி வரும் இரு கடைகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமகன்கள் வரிசையில் நின்று மதுபானங்கள் வாங்கி செல்கின்றனர். இரு கடைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் செங்கல்வராயன் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் சரவணன் (வயது 38). தே.மு.தி.க. தலைமை கழக பேச்சாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு 10.20 மணியளவில் சரவணன் தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது.
உடனே அவர் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் அருகில் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மேற்பார்வையில் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலை கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் சரவணன் கொலை வழக்கில் தொடர்புடைய காஞ்சீபுரத்தை சேர்ந்த 4 பேர் வேலூர் மாவட்டம் காட்பாடி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். விசாரணையில் அவர்கள் காஞ்சீ புரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த கோகுல் (25), கார்த்திக் (25), பிரபாகரன் என்கிற சரவணன், பாண்டவர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (25) என்பது தெரியவந்தது. கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த பிரபாகரனின் அண்ணனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரவணனின் தம்பி கொலை செய்ததாகவும், அதற்கு பழிக்குப்பழி வாங்க இந்த கொலை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த லோமன் ஜென்னு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். கடந்த 2-ந்தேதி அவர் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் பகுதியில் கடலில் குளித்து விட்டு ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் லோமன் ஜென்னுவை கத்தி முனையில் மிரட்டி அருகில் உள்ள சவுக்கு தோப்புக்குள் தூக்கி சென்றனர். பின்னர் அவரை கற்பழித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. பழைய குற்றவாளிகளை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை இந்த வழக்கில் குற்றவாளிகள் பற்றிய விவரம் கிடைக்காததால் போலீசார் திணறி வருகிறார்கள்.
இதையடுத்து சுற்றுலாத் துறையினர் உதவியை போலீசார் நாடி உள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் பற்றிய விபரத்தை கேட்டு உள்ளனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அலுவலர் (பொறுப்பு) ராஜாராமிடம் கேட்ட போது, ‘‘மாமல்லபுரத்தில் இருந்து வெளிநாட்டவர் சூரிய குளிலுக்காக 8 கிலோ மீட்டர் தூரம் வரவேண்டிய அவசியம் இல்லை. போலியான சுற்றுலா வழிகாட்டிகள் பலர் உள்ளனர்.
எங்களிடம் சில கட்டுப்பாடுகள் இருப்பதால் வெளி நாட்டவர்கள் வழிகாட்டிகள் கேட்பது இல்லை. அதனால் அவர்கள் போலியான வழிகாட்டிகளை வைத்து சிக்கலில் மாட்டி வருகிறார்கள்.
மாமல்லபுரத்தில் உள்ள வழிகாட்டிகள் விபரத்தை போலீசார் கேட்டுள்ளனர். அதனை கொடுத்து உள்ளோம் என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரை சார்ந்தவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு சிலர் வீடுகளில் மட்டும் வருமான வரித்துறை சோதனை நடந்திருப்பதால் மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஓ. பி.எஸ் அணியினர் சவப்பெட்டியை வைத்து பிரசாரம் செய்தது அநாகரீகமானது.

மத்திய பா.ஜனதா அரசு ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் அரசியல் செய்து காலூன்ற முயல்கிறது. அ.தி.மு.க 2 ஆக உடைந்திருக்கும் இந்த நிலையில் பா.ஜனதா தனக்கு சாதகமான ஒரு அணியை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தல், துணைஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தலில் சந்திக்க வசதி ஏற்படுத்திக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் பா.ஜனதாவை காலூன்ற விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரகாசம். தனியார் விமான நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவரது மனைவி பானுமதி.
நேற்று மாலை பானுமதி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் தரும்படி கேட்டார்.
இதையடுத்து தண்ணீர் எடுப்பதற்கு வீட்டிற்குள் பானுமதி சென்றார். பின்னால் மறைந்து சென்ற வாலிபர் பானுமதியை கத்தியை காட்டி மிரட்டினான். பின்னர் அவரது வாய்க்குள் துணியை திணித்து, கையை கட்டி போட்டு அவர் அணிந்து இருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டான்.
சிறிது நேரத்துக்கு பின்னர் பூட்டி இருந்த கதவை பானுமதி தட்டினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பானுமதியை மீட்டனர். மொத்தம் 10 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சங்கர்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் 2-வது மெயின் ரோட்டில் வசிப்பவர் சந்திரசேகர். இவர் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு கிரீல்கேட்டை மட்டும் பூட்டிவிட்டு தூங்கினார். அப்போது கொள்ளையர்கள் பூட்டை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச் சென்றனர்.
பின்னர் கொள்ளையர்கள் அருகில் உள்ள குடிநீர் வாரிய அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஏதும் கிடைக்காததால் கம்ப்யூட்டரை கீழே போட்டு உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரிய காஞ்சீபுரம் வெள்ளகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மகன் சந்திரசேகர் (வயது 29). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
காஞ்சீபுரம் நகர தி.மு.க. பகுத்தறிவு கலை இலக்கிய அமைப்பில் முன்னாள் நகர துணை செயலாளராகவும் இருந்தார்.
நேற்று மாலை சந்திரசேகர் வீட்டில் இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு பேசிய மர்ம நபர் வெளியே வருமாறு அழைத்தார்.
இதையடுத்து சந்திரசேகர் உப்பேரிகுளம் சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென சந்திரசேகரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.
இது குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், காஞ்சீபுரம், திரு வள்ளூரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட ஒரு வார்டில் சீட்டு பெறுவதில் சந்திரசேகருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் சில பதிவுகள் செய்தார். சிங்கத்தின் நிழலில் பூனை இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். சில வாசகங்களையும் கிண்டலுடன் எழுதி இருந்தார்.
மேலும் காஞ்சீபுரத்தில் புதிதாக பிரபல ரவுடி என்று நம்ப வைத்து பூச்சாண்டி காட்டும் கேங் லீடரின் மிரட் டல் ஆடியோவை கேட்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்றும் பதிவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக சிலருடன் சந்திரசேகருக்கு மோதல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே இந்த தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
சந்திரசேகர் கிண்டல் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தது பிரபல ரவுடி ஸ்ரீதரை பற்றியது என்று தெரிகிறது. எனவே அவரது ஆதரவாளர்கள் சந்திரசேகரை தீர்த்துக் கட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
சந்திரசேகரை வெளியே அழைக்க முதலில் செல்போனில் பேசியது யார்? கடைசியாக அவர் யார்-யாருடன் பேசி உள்ளார் என்ற விபரத்தையும் போலீஸ் சேகரித்து வருகிறார்கள்.
மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் கொலை நடந்துள்ளதால் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பாங்காங்கில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த அஜ்மல்கான் வைத்திருந்த கைபையை சோதனை செய்த போது தங்க பிஸ்கட்டுகளை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. மொத்தம் 14 தங்கம் பிஸ்கட்டுகள் இருந்தது. இதன் எடை 1½ கிலோ ஆகும்.
இதையடுத்து தங்க பிஸ்கட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அஜ்மல் கானிடம் விசாரணை நடந்து வருகிறது.
மாமல்லபுரத்துக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜெசீனா (வயது 35) என்பவர் சுற்றுலா வந்தார். அப்போது மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் பகுதியில் கடலில் குளித்து விட்டு ஓய்வு எடுத்தபோது, மர்மநபர்கள் 2 பேர் ஜெசீனாவை அருகில் உள்ள சவுக்கு தோப்புக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். குற்றவாளிகளை பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் காலை புதுஇடையூர் குப்பம், பட்டிபுலம் குப்பம் மற்றும் காலனி, சூளேரிக்காட்டு குப்பம், நெம்மேலி குப்பம் பகுதியை சேர்ந்த 11 பேரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். விசாரணைக்குப்பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே பட்டிபுலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பட்டிபுலம் ஊராட்சி பகுதியில் உள்ள கடற்கரையில் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் இதுவரை நடந்தது கிடையாது. இந்த கற்பழிப்பு சம்பவம் எங்களை மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கி உள்ளது. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க பட்டிபுலம் ஊராட்சி மக்கள் போலீசுக்கு மிக்க உறுதுணையாக இருப்போம் என்றார்.
தனிப்படை போலீசார் காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு வழிப்பறி, கற்பழிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்களின் விவரங்களை திரட்டி வருகின்றனர்.
மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தனித்தனி குழுக்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மை குற்றவாளிகள் பற்றி துப்பு கிடைக்காததால் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்கி உள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஓட்டல் மற்றும் விடுதி நிர்வாகத்தினர் ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், அங்கு சூரியக்குளியலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாமல்லபுரம் வந்து சவுக்கு தோப்பில் உள்ள மறைவிடங்களில் காதல் ஜோடிகள் உல்லாசம் அனுபவிப்பதாகவும், சில்மிஷ நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடிகளை நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். அதையும் மீறி சவுக்கு தோப்புக்குள் புகுந்த ஜோடிகளை பிடித்து எச்சரித்தனர்.
துப்பட்டாவால் முகத்தை மூடி வந்த இளம்பெண்களிடம் முட்டுக்காடு சோதனை சாவடி மையத்தில் போக்குவரத்து போலீசார், வழக்கு பதிந்து விடுவோம் என்று மிரட்டி பணம் பறித்ததாகவும் மாமல்லபுரம் வந்த சில ஜோடிகள் தெரிவித்தனர்.
பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதனால் இந்த டாஸ்மாக் கடையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதனால் இந்த டாஸ்மாக் கடையை உடனே மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இன்று சாலையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பொழிச்சலூர் பம்மல் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் சங்கர் நகர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






