search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை நீதிபதிகள் ஆய்வு
    X

    நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை நீதிபதிகள் ஆய்வு

    • நீதிமன்றம் கட்டப்பட வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக தெரிவித்து வருகின்றனர்.
    • நீதித்துறைகளின் தேவைகள் குறித்து நீதி அரசர்களிடம் எடுத்துரைத்தனர்..

    பாப்பிரெட்டிப்பட்டி.

    தருமபுரி மாவட்டத்தில், மகிளா நீதிமன்றம், நில அபகரிப்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ,குடும்ப நீதிமன்றம் என பல பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 14 நீதிமன்றங்களும், பென்னாகரத்தில் 1, பாலக்கோட்டில் 3,அரூரில் 3, பாப்பிரெட்டிபட்டியில் 2 என மொத்தம் 23 நீதிமன்றங்கள் உள்ளன. அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டியில் மலைவாழ் மக்களுக்கு மாதாந்திர நீதிமன்ற முகாம் நடத்தப்படுகின்றது.

    மேலும் தற்போது பாலக்கோட்டில் இருந்து பிரித்து காரிமங்கலத்தில் நீதிமன்றம் துவங்குவதற்கான பணிகள் தற்போது வருகின்றது. பாப்பிரெட்டிப்பட்டியில் நீதிமன்றம் கடந்த 2008 -ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என 2 நீதிமன்றங்கள் துவங்கப்பட்டது.

    கடந்த 14 ஆண்டுகளாக நீதிமன்றங்கள் வாடகை கட்டிடங்களிலேயே இயங்கி வந்தது. இந்த வாடகை கட்டிடங்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனக் கூறி இப்பகுதி பொதுமக்களும், வழக்கறிஞர்களும் அரசுக்கு சொந்தமான இடத்தில் அனைத்து வசதிகளுடன் நீதிமன்றம் கட்டப்பட வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக தெரிவித்து வருகின்றனர்.

    அதற்கான முயற்சியாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல இடங்களை பார்த்தும் எதுவும் நீதிமன்றத்திற்கான இடமாக அமையவில்லை.

    இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நீதிமன்றத்துக்கான இடம் தேர்வு செய்வதற்காக உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் சாமிநாதன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் பாப்பிரெட்டிக்கு வருகை புரிந்தனர். இவர்கள் நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டனர். இந்த இடம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கட சமுத்திரம் வருவாய் கிராமத்தில் வருகின்றது.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்புறத்தில் தரிசு நிலமாக கரடு போல் உள்ள இந்த இடத்தில் 5 ஏக்கர் பரப்பில் நீதிமன்றம் கட்டிடங்கள் கட்டுவதற்காக இடம் பார்க்கப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, தருமபுரி முதன்மை குற்றவியல் நீதிபதி கணேஷ் ,சமரச நீதிமன்ற நீதிபதி ராஜா, குற்றவியல் எண் 1 நீதியரசர் பிரபு, அரசு தரப்பு வழக்கறிஞர் சரவணன், பாப்பிரெட்டிப்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அருணகிரி, வழக்கறிஞர்கள் சோமசுந்தரம், கலைமணி, தமிழ் ராஜ் மற்றும் ஏராளமானோர் ஆய்வு பணியின் போது உடனிருந்து நீதித்துறைகளின் தேவைகள் குறித்து நீதி அரசர்களிடம் எடுத்துரைத்தனர்..

    இந்த ஆய்வின் போது அரூர் கோட்டாட்சியர் பொறுப்பு ராஜசேகரன், அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சுப்பிரமணி மற்றும் வருவாய்த்துறை, நீதித்துறை, காவல்துறை என அரசு துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×