search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு: கோவை மாநகரில் வாகன சோதனை தீவிரம்
    X

    2 நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு: கோவை மாநகரில் வாகன சோதனை தீவிரம்

    • செயின் பறிப்பு சம்பவம் பெண்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை தேடி வருகிறனர்.

    கோவை:

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் ரத்தினபுரி, டாடா பாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது.

    இதுகுறித்து அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி லதா(வயது 55). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து வந்தார்.

    அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் லதா கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து அவர் ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோல கணபதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி(58). சம்பவத்தன்று இவர் தனது மகளுடன் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வாலிபர்கள் தமிழ்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர். மாநகரில் தொடர்ந்து நடந்து வரும் செயின் பறிப்பு சம்பவம் பெண்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் செயின் பறிப்பு ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை தேடி வருகிறனர்.

    மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    அந்த காட்சிகளை கைப்பற்றி செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் மர்மந பர்களை தேடி வருகின்றனர்.

    மாநகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை அடுத்து மாநகர் முழுவதும் நேற்று இரவு முதல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ்நிலையம், மார்க்கெட் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மாநகருக்குள் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

    வாகனங்களில் வருபவர்களிடம் தீரவிசாரித்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

    Next Story
    ×