என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  8 இடங்களில் ஜமாபந்தி தொடங்கியது
    X

    போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட போது எடுத்த படம்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் ஜமாபந்தி தொடங்கியது

    • உதவித்தொகை, பட்டா பெயர் இடமாற்றம், தனிப்பட்டா, தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • ஜமாபந்தியில் 97 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் ஜமாபந்தியை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தின், 8 தாலுகாக்களிலும் நேற்று ஜமாபந்தி முகாம் தொடங்கியது. போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்துதார்.

    முதல் நாள் நிகழ்ச்சியில் 6 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை வேண்டி 12 மனுக்களும், பட்டா மாற்றத்திற்கு 10 மனுக்களும், உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கு 17 மனுக்களும், வீட்டுமனை பட்டா வேண்டி 29 மனுக்களும், நில உடமை மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக 1 மனுவும், பரப்பு வித்தியாசம் கணிணி திருத்தம் தொடர்பாக 7 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 6 மனுக்களும், 1 புகார் மனுவும், 14 இதர துறை மனுக்கள் என மொத்தம் 97 மனுக்கள் வரப்பெற்றதை தொடர்ந்து, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட 6 கிராமங்களை சேர்ந்த கிராம கணக்கு பதிவேடுகளான அ பதிவேடு, எப்.எம்.பி. பதிவேடு, அடங்கல், 1 - ஏ உள்ளடக்கம், பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, தனிபட்டா, சிட்டா மற்றும் அடங்கல், பண வரவு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை மாவட்ட கலெக்டர் சரயு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு திட்டங்கள் உடனடியாக கிடைக்கும் வகையில் ஜமாபந்தி நடத்தப்படுகிறது. அதன்படி அந்தந்த பகுதிகளில் நடத்தப்படும் இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் இடமாற்றம், தனிப்பட்டா, மற்றும் சிறு சிறு பிரச்னைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தீர்க்கப்படாத தங்கள் பிரச்னைகள் குறித்தும் பொதுமக்கள் மனு கொடுத்தால் அதற்கான தீர்வுகள் எடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமிற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன் தலைமை தாங்கினார். இதில், வேப்பனப்பள்ளி உள்வட்டத்தை சேர்ந்த பதிமடுகு, இனாம்குட்டப்பள்ளி, தீர்த்தம், நாடுவனப்பள்ளி, அளேகுந்தாணி, நேரலகிரி, சூரியனப்பள்ளி, கங்கோஜிகொத்தூர், மணவாரனப்பள்ளி ஆகிய ஒன்பது கிராமங்களை சேர்ந்த, 60க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

    அவர்களது மனுக்களை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். இதில் தாசில்தார் சம்பத், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் சரண்யா தலைமையிலும், அஞ்செட்டி தாலுகாவில் ஓசூர் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையிலும், சூளகரி தாலுகாவில் உதவி நிலவரித்திட்ட அலுவலர் பாலாஜி தலைமையிலும், பர்கூரில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு தலைமையிலும், ஊத்தங்கரையில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் தலைமையிலும் ஜமாபந்தி தொடங்கியது.

    நேற்று மாவட்டத்தின், 8 தாலுகாவிலும் தொடங்கிய ஜமாபந்தி முகாம் சனி, ஞாயிற்றுகிழமைகள் தவிர வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×