என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த காளையை வீரர் ஒருவர் அடக்க முயலும் காட்சி.
சோகத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி
- ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து சென்றது.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பாா்வையில் 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி வீர தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று சோகத்தூர் டி.என்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியினை வருவாய் கோட்ட ஆட்சியர் கீதா ராணி மாடுபிடி வீரர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த உறுதிமொழியின் போது பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி, தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ,கிருஷ்ணகிரி, திருச்செங்கோடு, மதுரை, புதுக்கோட்டை, தேனி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றுள்ளது. மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தேனி ,சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் 450 பேர் பங்கேற்று உள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில் ஒரு சுற்றிற்கு 100 காளைகளும், காளைகளை அடக்குவதற்கு 25 மாடுபிடி வீரர்கள் என எட்டு சுற்றுகளாக நடைபெற உள்ளது. முதல் சுற்றில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து சென்றது. இந்த காளைகளை அடக்க காளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி வந்தனர்
இந்த ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பாா்வையில் 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் வருவாய் துறையினர், கால்நடை மருத்துவத் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.






