என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ மனிதசங்கிலி போராட்டம்
- அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உறுதியளித்தபடி உடனே அமல்படுத்த வேண்டும்.
- உறுதியளித்தபடி, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், மாதப்பன் ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தியோடர் ராபின்சன், பட்டதாரி ஆசிரியர் கழகம் நாராயணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் குருநாதன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மனித சங்கிலி போராட்டத்தில், சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து, 2003 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உறுதியளித்தபடி உடனே அமல்படுத்த வேண்டும். 2003, 2004-ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக்காலத்தை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
உறுதியளித்தபடி, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல், ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.