என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே சுவாரசியம்: ஒரு ஆட்டுக்கு சொந்தம் கொண்டாடிய 2 பெண்கள் சாதுரியமாக தீர்வு கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்
- காணாமல் போன தனது ஆடுகளும் உள்ளது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- இன்ஸ்பெக்டர் முருகன் இதில் சாமர்த்தியமாக தீர்வு கண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மலர். இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதில் சில ஆடுகள் திருடு போய் விட்டன.
இந்நிலையில் அருகேயுள்ள போச்சம்பள்ளியில் வாரம்தோறும் ஆட்டு சந்தை நடைபெறும். நேற்று நடந்த சந்தையில் சந்தூர் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் தொப்படிக்குப்பத்தை சேர்ந்த சின்னப்பாப்பா என்பவர் விற்ற 4 ஆடுகளை வாங்கினார்.
அப்போது காணாமல் போன தனது ஆடுகளை யாராவது விற்கிறார்களா என்று பார்க்க மலரும் அந்த சந்தைக்கு வந்தார்.
சின்னசாமி வாங்கி வந்த ஆடுகளை பார்த்த மலர் அதில் காணாமல் போன தனது ஆடுகளும் உள்ளது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மலர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சின்னசாமி தான் ஆடு வாங்கிய சின்னப்பாப்பாவையும் அழைத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்றார்.
ஒரே ஆட்டுக்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய விவகாரம் குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் முருகன் இதில் சாமர்த்தியமாக தீர்வு கண்டார்.
புகார் தந்த மலரை ஒருபுறமும், அந்த ஆட்டை விற்ற சின்னப்பாப்பாவை ஒருபுறமும் நிற்க வைத்தார். பின்னர் அந்த ஆட்டை அவிழ்த்துவிட சொன்னார். ஆடு நேராக சின்னப்பாப்பாவிடம் ஓடிச்சென்று அவரை சுற்றிச்சுற்றி வந்தது. பின்னர் அந்த ஆடு அவரின் மடியில் படுத்தது.
இதனால் அந்த ஆடு சின்னப்பாப்பா வளர்த்தது தான் என்பது உறுதியானது.இதனால் மலர் திரும்பி சென்றார். இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.






