search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமனூரில் குழாய் பதிக்கும் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல்
    X

    குழாய் பதிக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலையை படத்தில் காணலாம்.

    சின்னமனூரில் குழாய் பதிக்கும் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல்

    • குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் மின் மாற்றிகள், உயர் அழுத்த மின் கம்பிகளை ஒட்டிய பகுதிகளில் மண் அகற்றப்பட்டு எந்த பிடிமானமும் இல்லாமல் நிற்பதால் எப்பொழுதும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது.
    • சின்னமனூர் பைபாஸ் சந்திப்பில் விவசாய நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டதினால் கடந்த 2 நாட்களாக விவசாயத்திற்கு உள்ள நீர் வீணாக சாலையில் ஆறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணிகள் தேனி மாவட்டத்தில் நடந்து வருகிறது. சின்னமனூர் - உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் திட்டத்திற்காக குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுவிட்டன.

    இந்நிலையில் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் மின் மாற்றிகள், உயர் அழுத்த மின் கம்பிகளை ஒட்டிய பகுதிகளில் மண் அகற்றப்பட்டு எந்த பிடிமானமும் இல்லாமல் நிற்பதால் எப்பொழுதும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஒருபுறம் வாகனங்கள் அதிகம் போக்குவரத்துள்ள தேசிய நெடுஞ்சாலை, மறுபுறம் விவசாய நிலங்கள் என்ற இரண்டுக்கும் நடுவே ஆபத்தான நிலையில் எந்த பிடிமானமும் இல்லாமல் சாய்ந்த நிலையில் மின் மாற்றிகளும் உயர் மின்னழுத்த கம்பிகளும் நிற்கின்றன .இதனால் வாகன ஓட்டிகளும் விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்.

    குழாய் பதிப்புக்காக பணிகள் நடைபெற்ற போது பாசனத்திற்காக இருந்த நீர் வழி பாதைகள் சிதைக்கப்பட்டு தற்போது நீர் பாசன வசதி பெற முடியாமல் பல ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன .மேலும் சின்னமனூர் பைபாஸ் சந்திப்பில் விவசாய நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டதினால் கடந்த 2 நாட்களாக விவசாயத்திற்கு உள்ள நீர் வீணாக சாலையில் ஆறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையும் பழுதடைந்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.

    குழாய் பதிப்பிற்காக தார்சாலையை ஒட்டி சில இடங்களில் மண் அள்ளப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலை எந்த பிடிமானம் இல்லாமல் சரிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. சின்னமனூர் - கம்பம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகி உள்ளன.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் குழாய் பதிப்பு பணிகளை முழுமையாக முடித்து சீரமைப்பு பணிகளை விரைந்து செய்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×