search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதி தேர்வு
    X

    இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதி தேர்வு

    • மாணவர் சேர்க்கைக்கு, தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3ம் தேதியன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற உள்ளது.
    • தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கிருஷ்ணகிரி,

    இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி நடைபெறும் என கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் ராணுவ கல்லூரியில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் 8-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு, தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3ம் தேதியன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற உள்ளது.

    இந்த தேர்விற்கான விண்ணப்ப படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய அமர்விற்கான வினாத்தாள் தொகுப்பை ராஷ்டிரிய இந்தியன் ராணுவ கல்லூரியின் இணையதளம் மூலமாக பொதுப்பிரிவினர்கள் ரூ.600-ம், எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.555-ம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 1.1.2024-ம் தேதியன்று 2.1.2011-க்கு முன்னதாகவும், 1.7.2012-க்கு பிறகும் பிறந்திருக்க கூடாது.

    ராணுவ கல்லூரியில் அனுமதிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவும், அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோவாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை-600 003. என்ற முகவரிக்கு வரும் 15-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்று சேர வேண்டும்.

    தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், விவரங்கள் அறிந்திட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04343-236134 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×