என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 681 கனஅடியாக அதிகரிப்பு
- அணைக்கு விநாடிக்கு வந்து கொண்டிருக்கும் 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 8.58 அடியாக உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பரவலான மழையால், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 361 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 681 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 49.80 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று(4ம் தேதி) கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டுவிடும். இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் திறந்துவிடப்படும் என நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதே போல், சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணை முழு கொள்ளளவு நிரம்பி உள்ளதால், அணைக்கு விநாடிக்கு வந்து கொண்டிருக்கும் 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு நீர்வரத்து கடந்த சில வாரங்களாக நின்றிருந்த நிலையில், நேற்று நீர்வரத்து விநாடிக்கு 110 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 8.58 அடியாக உள்ளது.






