என் மலர்
உள்ளூர் செய்திகள்

வத்தல் மலை அடிவாரத்தில் மூடிக்கிடக்கும் சோதனை சாவடியை படத்தில் காணலாம்.
வத்தல் மலையில் விடுமுறை நாட்களில் அதிகரிக்கும் சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும்
- வத்தல்மலையில் விடுமுறை நாட்களில் அதிகரிக்கும் சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- வத்தல்மலையில் சனத்குமார நதி உற்பத்தியாகிறது. அந்த பகுதியில் 3 அருவிகள் அருகருகே உள்ளன.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் வத்தல்மலை உள்ளது. இது தருமபுரியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கிழக்கு தொடர்ச்சி மலை தொடரான சேர்வராயன் மலை பகுதியில் வத்தல்மலை அமைந்திருப்பதால் குளிர்ச்சியாக காணப்படும். இந்த மலையில் சின்னங்காடு, பால்சிலம்பு, பெரியூர், உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இதனை தவிர முருகன், சிவன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு அதிகளவில் சிறுதானியம் பயிர் செய்யப்படுகிறது. காபியும், மிளகும் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. தருமபுரியில் இருந்து அரசு பஸ் வசதியும் உள்ளது.
வத்தல்ம லையில் சனத்குமார நதி உற்பத்தியாகிறது. அந்த பகுதியில் 3 அருவிகள் அருகருகே உள்ளன. மலையை சுற்றி 24 கொண்டை ஊசி வளைவுகள் கடந்து தான் வத்தல்மலைக்கு செல்ல முடியும்.
இங்குள்ள மெயின் அருவியான குதிமடுவு அருவியில் குளிப்பதற்கும்- இயற்கை அழகை கண்டுகளிப்பதற்கும் வார விடுமுறை நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் வருகின்றனர். இங்கு எப்போதும் மிதமான கால நிலை நிலவுகிறது. மலை நடுவே அமைந்துள்ள வயல்வெளிகள் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது. செப்டம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்ல மிக சிறந்த மாதமாக இருக்கிறது. மேலும், தனிமை விரும்பிகளுக்கு இது நல்ல அனுபவத்தை வழங்கும். இந்நிலையில் இங்கு வரும் சிலர் மலைப்பகுதிகளில் மது அருந்தி விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
இது குறித்து வத்தல்மலையை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-
வத்தல்மலைக்கு வார விடுமுறை நாட்கள் மட்டும் அரசு விடுமுறை தினங்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் , சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். அதிலும் அதிக அளவில் இளைஞர்கள் வந்து குளித்து செல்கின்றனர். இந்த நிலையில் வாலிபர்கள் கும்பலாக காட்டுப் பகுதிகளில் மது அருந்தி விட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடக்கின்றன. மது அருந்துபவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டை ஊசி வளைவுகளில் போதையில் விபத்தை ஏற்படுத்துகின்றனர். சில மாதங்களில் 10க்கும் மேற்பட்ட விபத்துகளும் அதில் 2 பேர் பலியும் ஆகியுள்ளனர்.
6 மாதங்களுக்கு முன்பு வரை வத்தல்மலைக்கு கீழே சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது மது பாட்டில்களுடன் மலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதனால் மோட்டர் சைக்கிளில் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது சோதனை சாவடி மூடிக்கி டக்கிறது.
கண்காணிப்பு பணியில் உள்ள போலீசாரும் இல்லை. இதனால் வத்தல்மலைக்கு சுற்றுலா பயணிகள் போர்வையில் சமூக விரோதிகள் வந்து பொது மக்களுக்கு அச்ச மூட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். ஆகவே மீண்டும் வத்தல் மலைக்கு செல்லும் மலை அடிவாரத்தில் சோதனை சாவடியை திறந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






