என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்து வட்டி கொடுமையால் கணவன், மனைவி தற்கொலை- ஆஸ்பத்திரிக்குள் உயிரைவிட்டதால் பரபரப்பு
    X

    கந்து வட்டி கொடுமையால் கணவன், மனைவி தற்கொலை- ஆஸ்பத்திரிக்குள் உயிரைவிட்டதால் பரபரப்பு

    • வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
    • இருவருடைய உடல்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கந்து வட்டி, மீட்டர் வட்டி பெயரில் பல்வேறு வகைகளில் கடன் கொடுக்கப்படுகிறது. மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக கடன் வாங்கியவர்கள், சரியான நேரத்தில் கடன் தொகையை செலுத்தியும் கூட அவை வட்டிக்கே கழிந்து விட்டதாக கடன் கொடுத்தவர்கள் கூறுகிறார்கள். இதனால் கடன் வாங்கியவர்கள் சொத்துக்களை இழந்ததுடன், கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    மாவட்டத்தில் காய்கறி சந்தை வியாபாரிகள் முதல் பெரிய, பெரிய முதலாளிகள் வரை இந்த கந்து வட்டி கும்பலிடம் சிக்கி திணறி வருகிறார்கள்.

    கந்து வட்டி வசூலில் அரசியல் முக்கிய புள்ளிகளும் கோலோச்சி வருகிறார்கள். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பலர் கந்துவட்டி கொடுத்து வருகிறார்கள்.

    5 சதவீதம், 7 சதவீதம், 10 சதவீத வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்க தொடங்கி இருக்கிறார்கள். நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பெண்கள் வட்டி தொழிலில் இறங்கி உள்ளனர். தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் சில சுய உதவிக்குழு நடத்தி வரும் பெண்கள் சிலரை, தங்களது பணியாளர்களாக நியமித்து அவர்கள் மூலம் பெண்களுக்கு கடன் கொடுக்கிறார்கள். இது தவிர பெண்கள் சிலர் பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்று, அந்த கடன் தொகையை மீட்டர் வட்டி, கந்து வட்டி பெயரில் குடும்ப பெண்களுக்கு கொடுத்து வசூலிக்கிறார்கள்.

    குழந்தைகளின் கல்வி செலவு, கணவரின் மருத்துவ செலவு உள்பட பல்வேறு அவசர தேவைகளுக்காக கடன் தொகையை வாங்கிய பெண்கள், அந்த கடன் தொகைக்கு மேல் செலுத்தியும் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனால் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள். கடன் கொடுத்த நபர்கள் கும்பலாக சென்று மிரட்டுவதால், கடன் வாங்கிய பெண்கள் கடைசியில் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்துக்கு வந்து புகார் அளிக்கலாம் என்ற நிலையை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் லேத் பட்டறை உரிமையாளர் தங்கராஜ், அவரது மனைவி விஜயா, தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருவருடைய உடல்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரேத பரிசோதனை கூடம் முன்பு உறவினர்கள் திரண்டு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபரை கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,

    வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் தமிழ்நாடு 1957-லிலிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

    அதன்படி வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாக நடத்துபவர்கள் முறைப்படி தாசில்தாரிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். இது தனி நபர், கூட்டாக பங்குதாரர்களாக நடத்தலாம். அடகு கடை வைத்திருப்பவர்கள் லைசென்ஸ் வாங்குவது போல் இதற்கும், 'மணி லெண்டர்ஸ் ஆக்ட் 1957'-ன் கீழ் உள்ள சட்டத்தின் கீழ் லைசென்ஸ் வாங்க வேண்டும். அப்படி இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத் தொழிலாக செய்வது சட்டப்படி குற்றம். அது மட்டுமின்றி, வட்டி பணம் கட்டாதவர்களை மிரட்டுவது, தொந்தரவு கொடுப்பது குற்றமாகும்.

    இதனிடையே ராஜா, கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளதால் அவர் மீது சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×