search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பகுதியில் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சம்
    X

    கொள்ளை நடந்த வீடு.

    பல்லடம் பகுதியில் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சம்

    • சில வாரங்களாக நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில் அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 43). இவர் வீட்டுக்கு அருகே வசிப்பவர் கணேஷ். இந்த நிலையில் 2 பேரும் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவர்கள் 2 பேரின் வீட்டின் கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது சசிகுமார் வீட்டில் 12 பவுன் நகையும், கணேஷ் வீட்டில்16 பவுன் நகையும் திருட்டு போனதாக கூறப்படுகிறது. மேலும் ரொக்கம் சுமார் ரூ.30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுற்றுப்புறப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், திருடர்களைப் பற்றி எந்த தடயமும் கிடைக்கவில்லை. பல்லடம் பகுதியில் சில வாரங்களாக நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்தநிலையில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள வீடுகளில், திருட்டு உள்பட குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிரம் காட்டுகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:- முக்கிய சாலைகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன. மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு இவைகள் உதவிகரமாக இருக்கின்றன. வீடுகளில் ஆட்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் கைவரிசை காட்டுகின்றனர். போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து வெளியூர் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டாலும் இதை, பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில் அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.

    வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும். திருப்பூரில் நடந்த சில கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை வீடுகளின் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவைக் கொண்டு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. எனவே வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதோடு நில்லாமல் அவை முறையாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×