என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் அனுமதி இல்லாமல் சினிமா படப்பிடிப்பு
- அனுமதி பெறாமல் நடத்தியதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காண வேண்டும்.
ஊட்டி,
ஊட்டி நகரசபை கூட்டம் அதன் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ரவிகுமாா், ஆணையா் காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
ஜாா்ஜ் தி.மு.க.): ஊட்டி மாரியம்மன் கோவில் முதல் பஸ் நிலையம் வரை லோயா் பஜாா் சாலையின் இருபுறம் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. இதற்கு உரிய தீா்வு காண வேண்டும்.
முஸ்தபா (தி.மு.க.): ஊட்டி நகரில் நாய் தொல்லை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். நகரின் முக்கிய இடங்களில் சுற்றுலாத் தலங்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
தம்பி இஸ்மாயில் (தி.மு.க. ): பருவ மழை தொடங்கி யுள்ள நிலையில் காந்தல் பகுதியில் கால்வாய்கள் இன்னும் முழுமையாக தூா்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீருடன் சோ்ந்து மழைநீா் குடியிருப்புகளுக்குள் புகக் கூடிய அபாயம் உள்ளது.
ரவி (தி.மு.க. ): ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடத்துவது தொடா்பாக சிலா் நகராட்சியிடம் அனுமதி பெறாமல் நடத்தியதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பஸ் நிலையம் அருகே படகு இல்ல சாலையோரத்தில் நகராட்சி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகராட்சி துணைத் தலைவா் ரவிகுமாா்: கவுன்சிலா்கள் தங்கள் வாா்டுகள் தவிா்த்து பிற வாா்டுகளில் செயல்படுத்தப்படும் வளா்ச்சி திட்டங்களில் தலையிட்டால் தவறு. ஆனால் பிற வாா்டுகளில் சட்ட விரோதமாக நடைபெறும் ஆக்கிரமிப்புகள், கட்டுமானங்கள் போன்றவை தொடா்பாக யாா் வேண்டுமானாலும் தலையிடலாம். நகராட்சியில் சில இடங்களில் கால்வாய்கள் கூட ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் கட்டப்பட்டுள்ளன.
ரமேஷ் (தி.மு.க.): வாா்டு பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கான டெண்டா் விடப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
கஜேந்திரன் (தி.மு.க.): குன்னூா் சாலையில் ஆவின் முதல் சவுத்வீக் வரை பல இடங்களில் தனியாா் பணிமனைகள் முளைத்துள்ளன. தலையாட்டுமந்து பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காண வேண்டும்.
உறுப்பினா்கள் பேசிய கருத்துகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரசபை ஆணையா் தெரிவித்தாா்.






