என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம்
- 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சுமார் 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகள் கடந்த 1-ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு பூஜைகள், சிறப்பு யாகத்தை தொடர்ந்து, 3 கால பூஜைகள் நடைபெற்றது.
பின்னர், கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை செய்து, சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மகா கும்பாபிஷேகத்தை, திருவண்ணாமலை, காந்தபாளையம் சீந்தல் மடாலயம், ஸ்ரீ ஆதி சிவலிங்க ஆச்சாரிய சுவாமிகள், 65-வது மடாதிபதியும் ஸ்ரீமத் பரமாச்சாரியார் கோளரினாத ஆதீனம், 39 -வது பீடாதிபதி ஸ்ரீ சிவராஜ ஞானாச்சாரியார் சுவாமிகளும், இளைய பட்டம் ஞானசேகரன் ஆகியோர் குழுவினருடன் வேத மந்திரங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது.
விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் எம்.எல்.ஏ, கே கோபிநாத், ஜெ. ஜெய்சங்கர், ஆறுமுகம், கோயிலின் பரம்பரை பூசாரி ஸ்ரீதர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.






